அரசியல் அங்கீகாரம் இல்லாத எந்த சாதிக்கும் மரியாதை இருக்காது.எனவே, வரும் தேர்தல்களில் பிராமணர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் வலியுறுத்தினார். ‘தமிழகத்தில் பிராமணர்கள் எதிர்காலம்’ என்ற தலைப்பிலானகருத்தரங்கம் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக நடிகரும், பாஜக ஆதாரவளருமான எஸ்.வி.சேகர் பங்கேற்றுப் பேசியதாவது: தாய், தந்தை, சாதி, மதம் போன்றவற்றை நம்மால் தீர்மானிக்க முடியாது. இறைவன்தான் தீர்மானிப்பார். ஒருவர் தேவையின்றி மதம் மாற வேண்டியதில்லை. ஒவ்வொரும் தங்களது சமூகத்தின் பெருமைபற்றி பேசலாம். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அடுத்த சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசக்கூடாது. தமிழகத்தில் பிராமணர்கள் 45 லட்சம் பேர் உள்ளனர். பிராமணர்களை உயர் சாதியினர் என்று கூறியே, அனைத்து சலுகைகளும் மறுக்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழகத்தில் பிராமணர்களுக்கு நல வாரியம் அமைக்கவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை ஏற்படுத்தித் தரவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். பிராமணர்கள் சமூகம் முன்னேற, நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
அரசியல் அங்கீகாரம் இல்லாத எந்த சாதிக்கும் மரியாதை இருக்காது. எனவே, வரும் தேர்தல்களில் பிராமணர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும். பிரதமர் மோடியை, அண்ணாமலை ஏமாற்றி வருகிறார். அவரது செயல்பாடுகள் மதரீதியாகவும், தீயநோக்குடனும் உள்ளன. இதனாலேஅவரை எதிர்க்கிறேன். அண்ணாமலையின் பேச்சை நம்பாதீர்கள். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியடையும். ஆனால், தமிழகத்தில் மட்டும் எந்த மாற்றமும் இருக்காது. புதிதாகத் தொடங்கியுள்ள அறவோர் முன்னேற்றக் கழகம், பிராமணர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.