பணிச் சுமை காரணமில்லை!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு குடும்பச் சூழலோ, பணிச் சுமையோ காரணம் கிடையாது என்று கூடுதல் டிஜிபி அருண் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டிஐஜி விஜயகுமார் மிகவும் திறமையான அதிகாரி. அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். மேலும், அவர் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் பாராட்டுப் பெற்றுள்ளார்.

மன அழுத்த சிகிச்சை: சில வருடங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் பேசி, இதை உறுதிப்படுத்தினேன்.

விஜயகுமாருக்கு `ஓசிடி கம் டிப்ரஷன்’ இருந்ததாகவும், அதற்கு மருந்துகள் எடுத்து வந்ததாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட விஜயகுமார், மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது என்று கூறி, அதற்கான மாத்திரைகளைப் பெற்றுள்ளார்.

மன அழுத்தம் அதிகமாக இருந்ததால்தான், அவரது மனைவி, மகள் ஆகியோர் சென்னையில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் கோவைக்கு வந்து, அவருடன் வசித்துள்ளனர். இந்த சூழலில், விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நேரிட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில், இது மருத்துவக் காரணத்தால் நடந்த நிகழ்வாகும்.

காவல் துறையினரின் மன அழுத்தத்தை போக்க பல்வேறு நலவாழ்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். மன உளைச்சல் என்பதும், மன அழுத்தம் என்பதும் வெவ்வேறானது. மன அழுத்தத்தைப் போக்க, மருத்துவர்களின் உதவி நிச்சயம் தேவை. இதையெல்லாம் மீறி விஜயகுமார் தற்கொலை சம்பவம் நேரிட்டுள்ளது.

குடும்ப சூழலும் காரணமல்ல.. அதேபோல, அவரது தற்கொலைக்கு குடும்பச் சூழலும் காரணம் இல்லை. மனைவி, குழந்தை ஆகியோர் அரவணைப்பாகவும், ஒத்துழைப்பாகவும்தான் இருந்துள்ளனர். அவருக்கு பணிச் சுமையும் கிடையாது. இந்நிகழ்வை, ஒருவரின் தனிப்பட்ட செயல்பாடாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு கூடுதல் டிஜிபி அருண் கூறினார்.