கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்களில் ஆபத்தான நச்சு இரசாயனங்கள் அதிகளவில் காணப்பட்டதாக இவ்விபத்து தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வரும் அந்நாட்டின் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் 12ஆம் திகதி அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் போயிங் 787 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளில் அதன் கட்டுப்பாட்டை இழந்து, 600 அடி உயரத்தில் உள்ள கட்டடமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது.
அவ்விமானத்தில் இருந்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர ஏனைய 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தமாக 260 பேர் உயிரிழந்தனர்.
அந்த விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் பிரஜையான விஸ்வாஸ்குமார் ரமேஷ் (வயது 40) என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதோடு, 53 பேர் பிரிட்டன் பிரஜைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து, உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்கள் பிரிட்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகின.
அந்நாட்டின் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரியான பேராசிரியர் ஃபியோனா வில்கொக்ஸ் (Fiona Wilcox) விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகள் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், உயிரிழந்த பிரிட்டன் பிரஜைகளின் உடல்களில் ஃபோர்மலின், கார்பன் மொனொக்சைட், சயனைட் ஆகிய ஆபத்தான நச்சு இரசாயனங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள் வெஸ்ட்மின்ஸ்டர் பொதுப் பிரேத அறையில், இரசாயனங்கள் காணப்படும் உடல்களை கையாள்வதால் ஊழியர்களும் கடுமையான ஆபத்துக்களை எதிர்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவப்பெட்டிகளை திறக்கும்போது வெளிவரும் இரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றால் சுவாசப் பிரச்சினைகள், வளர்சிதை மாற்ற சிக்கல்கள், சிலவேளைகளில் உயிராபத்தும் உண்டாகக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நச்சு இரசாயனங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தீவிர நிலைக்குச் செல்வதை தடுக்க, இங்கிலாந்து அரசாங்கமும் சம்பந்தப்பட்ட துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் அறிக்கையின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.





