இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்தி விட்டோம்- ரஷியா தகவல்

உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் ரஷிய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் உதவியாளர்களாக சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ரஷியாவில் வேலை வாங்கி தருவதாக ஏஜென்டுகள் மூலம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர்களை வலுகட்டடாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்த்ததாக தகவல் வெளியானது.இதற்கிடையே ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 8 இந்திய இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்திய இளைஞர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. சமீபத்தில் பிரதமர் மோடி ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் புதினிடம் வலியுறுத்தினார்.

இதை ரஷியா ஏற்றுக் கொண்டது.இந்த நிலையில் இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷிய தூதரகம் கூறியதாவது:-ரஷிய ராணுவத்தில் பணிபுரியும் இந்திய குடிமக்களின் பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்க ஊடகங்களில் இருந்து பல கோரிக்கைகள் வந்தது. உக்ரைனில் ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின் போது இந்தியர்களின் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு இந்திய அரசுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ரஷியாவில் ராணுவ சேவைக்காக தானாக முன்வந்து ஒப்பந்தம் செய்த இந்தியர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை வெளியேற்றுவதற்கு இரு நாடுகளிலும் ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றன.

ரஷிய ஆயுதப்படைகளில் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வது ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. அனைத்து ஒப்பந்தக் கடமைகள் மற்றும் உரிய இழப்பீட்டுத் தொகைகள் முழு அளவில் நிறைவேற்றப்படும்.ரஷிய அரசாங்கம் ராணுவத்தில் ஆட்சேர்ப்பு குறித்து எந்தவொரு பொது அல்லது தெளிவற்ற பிரச்சாரங்களிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளது.