இந்தியா நோக்கி வந்த இஸ்ரேலிய கப்பல் செங்கடலில் கடத்தல்

இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் பெரும் பணக்காரருக்கு சொந்தமான கப்பல் ஒன்றை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் கடத்தியுள்ளனர். அந்தக் கப்பலில் இருந்த 25 பேரும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போர் தற்போது அந்தப் பிராந்தியத்தில் கடல்வழியில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதன் அடையாளமாக இந்தக் கடத்தல் சம்பவம் உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஈரான் ஆதரவு ஹவுத்தி படைகள் கூறும்போது, இஸ்ரேலுடன் தொடர்புடைய காரணத்தாலேயே அந்தக் கப்பலை நாங்கள் சிறைப்பிடித்துள்ளோம். காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்படும் வரை கடல் பகுதியில் இதுபோல் இஸ்ரேல் கப்பல்களை குறிவைப்போம். இஸ்ரேல் நாட்டுக் கப்பலோ இல்லை இஸ்ரேலுடன் வர்த்தக தொடர்புள்ள கப்பலோ நிச்சயமாக எங்களின் இலக்காகும் என்று எச்சரித்துள்ளனர்.
இது ஆரம்பம்தான்.. ஹவுத்தி படைகளின் தலைமை செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல் சலாம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலியர்களுக்கு அடக்குமுறை தான் புரியும். இஸ்ரேல் கப்பலை நாங்கள் இப்போது பிணையாக பிடித்துவைத்திருப்பது போரில் நாங்கள் எங்களை இணைத்துக் கொண்டதன் தீவிரத்தை உணர்த்தும். என்ன விலை கொடுத்தாவது கடல்பரப்பில் நாங்கள் இந்தப் போரை மேற்கொள்வோம். இது வெறும் ஆரம்பம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகம் கண்டனம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தின் கண்டனக் குறிப்பில், ஹவுத்திக்கள் இஸ்ரேலிய பெரும் பணக்காரர் ஒருவருக்குச் சொந்தமான கப்பலை சிறைப்பிடித்துள்ளது. அதில் உள்ள 25 பேரில் ஒருவர் கூட இஸ்ரேலியர் அல்ல. பல்கேரியா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, உக்ரைன் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கும் கப்பலைக் கடத்தி ஏமன் மிகப்பெரிய சர்வதேச குற்றம் புரிந்ததோடு உலக நாடுகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. இது ஈரானின் பயங்கரவாதத்தின் வெளிப்பாடு என்று கூறியுள்ளது.

இதற்கிடையில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படுவதாக ஹவுத்தி குழு தெரிவித்துள்ளது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.