இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது: வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் வேண்டுகோள்

 வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பின்னர் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சிறுபான்மையினரான இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடுகள், உடைமைகள், கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதனிடையே இந்துக்கள் மீதானதாக்குதலை கண்டித்து தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங்கில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. இதுவரை வங்கதேசத்தில் உள்ள இந்து மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 5 இந்துக்கள் உயிரிழந்துள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் இந்து மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

வங்கதேசத்தில் உள்ள இந்து,பவுத்தம், கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு கவுன்சில் தலைவர் டாக்டர் நீம் சந்திர பவுமிக், வங்கதேசபூஜா உட்ஜாப்பன் பரிஷத் அமைப்பின் தலைவர் வாசுதேவ்தர் ஆகியோர் முகமது யூனுஸைசந்தித்து தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் நேற்று முகமதுயூனுஸை, இந்து சிறுபான்மையினத் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். முன்னதாக டாக்காவில்உள்ள புகழ்பெற்ற கோயிலான தாகேஷ்வரி நேஷனல் கோயிலுக்கு, தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் வருகை தந்தார். அங்குள்ள இந்து அமைப்பின் தலைவர்கள், பொதுமக்களிடம் அவர் கலந்துரையாடினார். அப்போது அங்கு முகமது யூனுஸ் பேசும்போது, “வங்கதேச மக்கள் அமைதி காக்கவேண்டும். போராட்டம், வன்முறையில் ஈடுபடக்கூடாது. யாரும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. வன்முறை எதற்கும் தீர்வாகஅமையாது. முதலில் எங்களது அரசு என்ன செய்கிறது என்பதை கணிக்க எங்களுக்கு கால அவகாசம் தாருங்கள்” என்றார்.