சுமார் 17.5 மில்லியன் இன்ஸ்டாகிராம் (Instagram) பயனாளர்களின் தரவுகள் கசியவிடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை மெட்டா (Meta) நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது குறித்து மெட்டா நிறுவனத்தின் ஊடக பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
வெளித்தரப்பு ஒன்று சில பயனாளர்களுக்கு கடவுச்சொல் மாற்றத்திற்கான (Password Reset) மின்னஞ்சல்களை அனுப்ப வழிவகுத்த ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மெட்டா விடுத்துள்ள விளக்கம்: “எமது முறைமைகளில் (Systems) எவ்வித ஊடுருவல்களும் ஏற்படவில்லை என்பதையும், பயனாளர்களின் கணக்குகள் பாதுகாப்பாக உள்ளன என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். சில பயனாளர்களுக்கு தவறுதலாகக் கிடைத்த கடவுச்சொல் மாற்ற மின்னஞ்சல்களை அவர்கள் புறக்கணிக்கலாம். இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம், என மேலும் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக பல இன்ஸ்டாகிராம் பயனாளர்கள், தாம் கோராத நிலையில் திடீரென கடவுச்சொல் மாற்றத்திற்கான மின்னஞ்சல்கள் தமக்குக் கிடைப்பதாக சமூக வலைத்தளங்களில் கவலை வெளியிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்தே தரவு கசிவு குறித்த அச்சம் பரவியது. பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளோ அல்லது கணக்குகளோ எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை எனவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மெட்டா நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.



