இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றோம் !

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, தேவையான உணவு மற்றும் மருந்துகளை கைவசம் வைத்துக் கொள்ளுமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார அவ்வப்போது அந்நாட்டிலுள்ள நிலைவரங்கள் தொடர்பில் விசேட அறிவித்தல்களை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

இஸ்ரேலில் உள்ள அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடத்திற்கு அருகிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். தேவையற்ற பயணங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பு அமைச்சு மற்றும் இஸ்ரேலின் சனத்தொகை, குடியேற்ற மற்றும் எல்லை அதிகாரசபை (Pஐடீயு) வழங்கும் வழிமுறைகளை எப்போதும் பின்பற்றவும். அத்தியாவசிய உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது 204 ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயிர் சேதம் ஏற்படவில்லை. தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர். இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கை தூதரகம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. நேற்று செவ்வாய்கிழமை (01) இஸ்ரேலில் உள்ள டக்கானா சந்தைக்கு விஜயம் செய்த இலங்கைப் பெண்னான தில் லியனகே தனது வாழ்விடத்திற்குச் செல்ல முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பில் விசாரிப்பதற்காக அவரைத் தொடர்பு கொண்ட போது, சில மணிநேரங்களுக்குப் பிறகு வாகனமொன்றில் பாதுகாப்பாக வீட்டுக்குச் சென்று விட்டதாக தெரிவித்தார். இதைத் தவிர இலங்கையர்கள் பற்றி வேறு எந்த சம்பவமும் இங்கு பதிவாகவில்லை.

ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட டெல் அவிவ் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு வர விரும்பும் பயணிகளும், இஸ்ரேலில் இருந்து இலங்கை செல்ல விரும்புபவர்களும் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் தங்கள் பயணத்திற்கு தேவையான விமானம் இயக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையைக் கருத்திக் கொண்டு லெபனான் மற்றும் சிரியாவுக்கு செல்லத் தீர்மானித்திருப்பவர்கள் தற்காலிகமாக அந்நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

நேற்றையதினம்  இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.