டொனால்ட்ரம்புக்கு 32 இலட்சம் ரூபா அபராதம்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக சிவில் மோசடி வழக்கில் அவரின் மகள் இவான்கா ட்ரம்ப் சாட்சியம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஒருவர் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளார்.

டொனால்ட் ம்ரம்புக்குச் சொந்தமான ட்ரம்ப் ஓர்கனைசேஷன் நிறுவனத்துக்கு குறைந்த வரியையும் சிறந்த காப்புறுதியையும் பெற்றுக்கொள்வதற்காக உத்தியோகபூர்வ ஆவணங்களில் அந்நிறுவனத்தின் சொத்துக்களின் பெறுமதியை திரிபுபடுத்திக் காட்டினார்கள் என டொனால்ட் ட்ரம்ப், அவரின் மூத்த மகன் டொனனால்ட் ட்ரம்ப் ஜூனியர், மற்றொரு மகனான எரிக் ட்ரம்ப் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் நிறுவனத்துக்கு 250 மில்லியன் டொலர் அபராதமும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வேண்டும் என நியூயோர்க் சட்ட மாஅதிபர் கோரியுள்ளார்.

2017 ஜனவரி 20 முதல் 2021 ஜனவரி 21 ஆம் திகதிவரை அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்தார்.
ட்ரம்ப் நிறுவனத்துக்கு எதிரான புலனாய்வு விசாரணைகளை நியூயோர்க் சட்ட மா அதிபர் லெட்டிஷியா ஜேம்ஸ் 2019 முற்பகுதிலேயே ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவராக சேர்க்கப்படுவதிலிருந்து ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பை இவ்வருட முற்பகுதியில் நீதிமன்றம்  விடுவித்தது.

எனினும், டொனால்ட் ட்ரம்புக்கும் அவரின் மகன்மாருக்கும்  எதிரான இவ்வழக்கில் இவான்கா ட்ரம்ப் சாட்சியமளிக்க வேண்டும் என இவ்வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கும் நியூயோர்க் நீதிபதி ஆர்தர் என்கரோன் நேற்றுமுன்தினம் (27) உத்தரவிட்டார்.

ட்ரம்ப் நிறுவனத்திலிருந்து 2017 ஆம் ஆண்டு முதல் தான் ஒதுங்கியுள்ளாகவும் தற்போது தான் புளோரிடா மாநிலத்துக்கு குடிபெயர்ந்துவிட்டதாகவும் இவான்கா ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், ட்ரம்ப்பின் வர்த்தகங்களுடன் இவான்கா இன்னும் தொடர்புபட்டுள்ளதாகவும், சொத்துகளைக் கொண்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார்.

புளோரிடாவிலிருந்து வாக்குமூலம் அளிக்க இவான்காவுக்கு அனுமதி அளிக்குமாறு அவரின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார். இவான்கா நேரடியாக நீதிமன்றில் சாட்சியம் அளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

இவ்வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 6 ஆம் திகதி வாக்குமூலம் அளிப்பார் என நியூயோர்க் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவருக்கு முன்னர் ட்ரம்பின் பிள்ளைகள் மூவரும் வாக்குமூலம் அளிக்கவுள்ளனர். எதிர்வரும் புதன்கிழமை முதல் இவ்விசாரணைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்புக்கு 32 இலட்சம் ரூபா அபராதம்

இதேவேளை, மேற்படி வழக்கை விசாரிக்கும் நீதிபதியையும் நீதிமன்ற ஊழியர் ஒருவரையும் அவதூறாக விமர்சித்ததால், டொனால்ட் ட்ரம்புக்கு நீதிபதி என்கரோன் கடந்த புதன்கிழமை 10,000 அமெரிக்க டொலர் (சுமார் 32 இலட்சம் இலங்கை ரூபா) அபராதம் விதித்தார்.

தன்னையும் டொனால் ஊழியர்களையும் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது என ட்ரம்புக்கு ஏற்கெனவே நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  இந்த உத்தரவை மீறிய நிலையில் ட்ரம்புக்கு அபராதம் விதிக்கப்பட்டு;ளளது.