ஐக்கிய அரபு இராச்சியத்தில் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் 43 பேருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் மாற்றுக் கருத்தாளர்கள் 84 பேருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.
அதேவேளை, பயங்கரவாத அமைப்பு ஒன்றை ஸ்தாபித்தனர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் 53 பேர் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அபுதாபி சமஷ்டி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேற்படி பிரதிவாதிகளில் பெரும்பாலானோர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேரந்தவர்கள் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் சட்டமா அதிபர் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார். இவ்வமைப்பு அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வன்முறைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இரகசிய அமைப்பொன்றை ஸ்தாபித்திருந்தனர் எனவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சட்டமா அதிபர் கூறியிருந்தார்.
இது தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளாக காணப்பட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் மேலும் 10 பேருக்கு 10 முதல் 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களில் பெரும்பாலோனர் 2013ஆம் ஆண்டு முதல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன தெரிவித்துள்ளன.