வெறுப்புப் பேச்சு குற்றச்சாட்டு; கிறிஸ்தவ நபருக்கு பாக்., நீதிமன்றம் மரண தண்டனை

 பாகிஸ்தான் நாட்டில் வெறுப்பை பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நருக்கு மரண தண்டனை விதித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம்.

கிறிஸ்தவரான அந்த நபர், இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்தை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டு அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஜரன்வாலா நகரில் அமைந்திருந்த கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் தேவாலயங்களுக்கு தீயிட்டனர். குர்ஆன் நூலின் சில பக்கங்களை கிழித்தது, அதனை தரையில் போட்டு அவமதித்து, மற்ற பக்கங்களில் அவதூறான கருத்தை எழுதிய செயலுக்காக கிறிஸ்தவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியது.

இந்த சூழலில் எஹ்சான் ஷான் என்ற நபருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேதப்படுத்தப்பட்ட குர்ஆன் பக்கங்களை தனது டிக்-டாக் கணக்கு பதிவில் அவர் பகிர்ந்துள்ளார். அதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. அதற்காக அவருக்கு தற்போது பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த சூழலில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.