மருத்துவமனைகளை ஹமாஸ் பதுங்கிடமாகவும், தாக்குதலுக்கு திட்டமிடும் இடமாகவும் பயன்படுத்துகிறது, அல் ஷிபா மருத்துவம்னைக்குக் கீழ் ஹமாஸ் சுரங்கம் இருக்கிறது என்று கூறிவந்த இஸ்ரேல் அதனை உறுதிப்படுத்துவதுபோல் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. காசா மருத்துவமனைகளில் 35க்கும் மேற்பட்ட சுரங்கங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஹமாஸ், “அம்பலமானது: இந்தப் புகைப்படம் அக்டோபர் 7 2023 அன்று அல் ஷிபா மருத்துவமனையில் கேமராவில் பதிவானது. காலை 10.42 மணி முதல் 11.01 மணிக்குள் சில பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் அழைத்து வருகின்றனர். அதில் ஒருவர் நேபாளி, ஒருவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை மருத்துவமனை படுக்கையில் சுமந்து செல்கின்றனர். மற்றொருவர் நடந்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 1200 பேரும், காசாவில் குழந்தைகள் உள்பட 12300க்கு அதிகமானோரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ள காசாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அங்கே மருத்துவக் கழிவுகள் தேங்கி தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை அங்கிருந்து 2000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டாலும் கூட வெளியேற முடியாத நிலையில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் தவித்து வருகின்றனர். அங்கே ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனக் குழு நோயாளிகள் நிலவரம் குறித்து கவலை தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது,
55 மீட்டர் சுரங்கப்பாதை: அல் ஷிபா மருத்துவமனையில் 55 மீட்டர் அளவிலான சுரங்கப் பாதையை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சுரங்கப் பாதைக்குள் படிக்கட்டு, குண்டுகள் துளைக்காத கதவு, ஸ்னைப்பர்கள் தாக்குதல் நடத்த ஏதுவாக துப்பாக்கி முனை நுழையும் அளவிலான துளைகள் என பல்வேறு வசதிகளை ஹமாஸ் குழுவினர் ஏற்படுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்தது. ஆனால் இது முழுப் பொய் என்று ஹமாஸ் மறுத்துள்ளது.
இதற்கிடையில் பிணைக் கைதியாக பிடித்துவைக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த நோவா மார்சியானோ என்பவரை ஹமாஸ் குழுவினர் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அல் ஷிபா மருத்துவமனைக்குள் தான் அவர் கொல்லப்பட்டதாக ஆதாரங்களை வழங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம், ஹமாஸின் இயங்குதளமாக காசாவின் அல் ஷிபா மருத்துவமனை இயங்கியதற்கு இது ஒன்றே போதும் எனவும் தெரிவித்துள்ளது.
பிணைக் கைதிகள் விடுவிப்பு எப்போது? ஹமாஸ் வசம் 200க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் உள்ள நிலையில் அவர்கள் விரைவில் விடுவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவல்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் வேதனை: ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குத்ரேஸ் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நடக்கும் இந்தப் போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்றுக் கொள்ள முடியாத எண்ணிக்கையில் அதிகரிக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் போர் நிறூத்தப்பட வேண்டும் ” என்று பதிவிட்டுள்ளார்.