இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரனுக்கும் இடையிலான சந்திப்பின்போது தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் புரியப்பட்ட இனப்படுகொலை மற்றும் அதற்கான நீதி குறித்தும், தற்போது வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
லண்டனுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும் பிரித்தானியாவின் முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவருமான உமா குமரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது வட, கிழக்குவாழ் தமிழ்மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, அதற்குரிய நீதிப்பொறிமுறை, அண்மையகாலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு, அதன் விளைவாகத் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் என்பன பற்றி உமா குமரனிடம் எடுத்துரைத்ததாக சிறிதரன் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி தமிழ் மக்களுக்கு எதிரான கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதற்கான சாத்தியப்பாடு பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை முதன்முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் உமா குமரன், அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்ட வகையில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எவ்வாறான ஒத்துழைப்புக்களை வழங்கமுடியும் என்பது குறித்தும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டது.
இந்த சந்திப்பில் பிரித்தானிய தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதி சென் கந்தையா மற்றும் பிரித்தானியாவின் சிரேஷ்ட சட்டத்தரணிகளுள் ஒருவரான கணா கணநாதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.