தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் தியாக தீபம் திலீபன் ஆய்வரங்கு, இவ்வாண்டும் தமிழியல் பட்டகர்களின் 8 ஆவது அறிவாய்தல் அரங்காக கடந்த 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை bourse de travail 93200, Saint Denis என்ற இடத்தில் நடைபெற்றது. நண்பகல் சரியாக 13.01 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 11.11.1993 அன்று தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் வீரகாவியமான லெப். மாதங்கி மற்றும் 26.04.1996 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திரு யூட் ஆகிய இரண்டு மாவீரர்களின் சகோதரர் ஏற்றி வைத்து மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து ஏனையோரும் மலர்வணக்கத்தை செலுத்தியிருந்தார்கள். அதன்பின்பு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வில் மங்கல விளக்கு ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது. நடைமுறைத் தமிழ் வழிகாட்டி அகராதி தாயகத்தில் முதலில் வெளியிடும் போது இணைந்து பணியாற்றியவரும் போராளிகளின் குடும்ப பாதுகாப்பு துணைப்பொறுப்பாளராகவும் கொள்கை முன்னெடுப்புப் பொறுப்பாளராகவும் அறிவமுது நூல் களஞ்சியத்தை உருவாக்கியதில் ஒருவராகவும் விளங்கிய திரு. நடராசா பாஸ்கரன் முதன்மை விருந்தினராக வருகை தந்திருந்தார்
அவரே மங்கல விளக்கினை ஏற்றி தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு. ராசன், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு. நாகயோதீஸ்வரன் ,ஆகியோர் விளக்கினை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து, தமிழ்ச்சோலைக் கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குசன்வில் தமிழ்ச்சோலை மாணவர்களினால் வரவேற்பு நடனம் வழங்கப்பட்டது. வரவேற்புரையை பட்டக்கல்வி மாணவர்கள் தமிழிலும், பிரேஞ்சிலும், ஆங்கிலத்திலும் ஆற்றியிருந்தார்கள். அதன்பின்பு ஆய்வுநூலும் நடைமுறைத் தமிழ் வழிகாட்டி அகராதி நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டன. பின்பு ஆய்வாளர்களும், மொழிபெயர்ப்பாளரும் மதிப்பளிக்கப்பட்டார்கள். நடைமுறைத்தமிழ் வழிகாட்டி அகராதி பற்றிய உரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு. து. மேத்தா அவர்கள் வழங்கியிருந்தார்.
அவர் தனது உரையில், இந்த தமிழ்ச் சொல் அகராதி தமிழ்ப் பேராசிரியர்களால் வடிகட்டி எடுக்கப்பட்டு 1993 தமிழீழ தேச அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிட்டு வைக்கப்பட்டதை, மீண்டும் இன்றைய காலத்தின் தேவையை கருத்திற் கொண்டு தமிழ்ச்சோலைத் தலமைப்பணியகமானது உத்தரவு பெற்று வெளியிட்டு வைப்பதில் பெரும் மனநிறைவையும் பாராட்டுதல்களையும் தெரிவித்திருந்தார்.
நடைமுறை வாழ்வியலில் உள்ள பலவிளத்தங்களை பல்வேறு தலைப்புகளாக ஆய்வுகளை மேற்கொண்ட தமிழியல் பட்டகர்களையும் பாராட்டியதோடு, பல்வேறு தேடல்களின் ஊடாக கடந்த 8 வருடங்களாக அளப்பரிய உன்னத பணியாக அடுத்த தலைமுறைக்கு கொண்டும் செல்லும் அரும்பணியை செய்து வருகின்ற இவர்களை நன்றியோடு பாராட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆய்வுநூலையும் அகராதி நூலையும் வந்திருந்த கட்டமைப்பின் செயற்பாட்டாளர்கள், தமிழுணர்வாளர்கள், இனப்பற்றாளர்கள் எனப்பலரும் பெற்றுச்சென்றனர். சிறப்புரையை வணிக, வரிச்சட்ட ஆலோசகர் திருமதி சிவதேவன் சிந்துஜா வழங்கியிருந்தார். அவர் தனதுரையில்
குழந்தைகள் நலன் மற்றும் அதன் காப்பு சம்பந்தமான வழிகாட்டல்கள் பற்றியும் அதற்கான உதவிகளையும் சட்ட அடிப்படையில் செய்யத் தான் முன் வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆய்வரங்கிற்கான ஆய்வுகளை முதலாவதாக செல்வி துசியந்தன் இயல்வாணி“செயற்கை நுண்ணறிவும் தமிழ்மொழியில் ஏற்படப்போகும் மாற்றமும்” என்ற தலைப்பிலும், இரண்டாவதாக திருமதி கேதீஸ்வரன் நிறைந்தசெல்வி “போராளியின் காதலி புதினம் ஒரு போர்க்கால இலக்கியப்பார்வை” என்ற தலைப்பிலும், அடுத்து செல்வி ரிஜிதா “உலகப் பேராளுமைகளில் எதிரொளிரும் திருக்குறள் ஓர் ஆய்வு” என்ற தலைப்பிலும், அதைத் தொடர்ந்து செல்வி. யதுர்சா “பிரெஞ்சு நாட்டின் வணிகத்துறையில் முன்னேறும் தமிழர்கள் எதிர் நோக்கும் சிக்கல்களும் அவற்றிற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பிலும் நிறைவாக செல்வி பாத்திமா “அன்றாட வாழ்வியலில் முக்கிய பங்கை வகிக்கின்ற வைப்பகத்தின் செயற்பாடுகளும் செயற்றிட்டங்களும்” என்ற தலைப்பிலும் அரங்கில் ஆய்வுரைகளாக வழங்கியிருந்தார்கள். இவ்வாய்வுக் கட்டுரைகள் தமிழிலும், பிரெஞ்சு மொழியிலும் நூலாக்கம் செய்திருந்தமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்துமுதுகலை சட்டத்துறையின் பொறுப்பாளர் செல்வன் தமிழ்ப்பிரியன் ஆய்வுகள் பற்றி கருத்துரை வழங்கியிருந்தார்.
அடுத்து நாட்டுப் பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களை நினைவுகூரும் முகமாக அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை பற்றி செல்வி முருகையா ஜதுர்ஷனா எடுத்துரைத்தார்.அதனைத் தொடர்ந்து ஆய்வுநூல் மின்னிதழ் வெளியீடு நடைபெற்றது. திருமதி சுகன்யாஅவர்களின் நன்றியுரையை அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் அறிவாய்தல் அரங்கு நிகழ்வு நிறைவுற்றது.
நிகழ்வின் இடைவேளையின் போது தமிழரின் விருந்தோம்பல் பண்பாட்டில் ஒன்றாக நண்பகல் கஞ்சி வழங்கப்பட்டதும் குறிப்பிட்டுக் கூறக்கூடியது.