அனர்த்தங்களால் சேதமடைந்த 315 வீதிகளில் 284 வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன!

மாகாண மட்டத்தில் 315 வீதிகள் சேதமடைந்தன. அவற்றில் 284 வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. 31 வீதிகள் மாத்திரமே புனரமைப்பிற்கு எஞ்சியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய மாகாணத்தில் 40 பாதைகளில் 25 பாதைகளின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கள் இடம்பெறுகின்றன. எஞ்சிய 25 வீதிகளில் இரு வீதிகள் கலல்பிட்டிய, உக்குவெல – எல்கடுவ வீதியாகும். இந்த வீதியின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது. அதனை மீளப் புனரமைக்க முடியாது. எனவே அதற்கு பதிலாக மாற்று பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. அதேபோன்று மாத்தளை – இலுக்கும்புர லக்கல வீதியும் பாரியளவில் சேதமடைந்துள்ளது.

ஊவா மாகாணத்தில் சேதமடைந்துள்ள 22 வீதிகளில் 17 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. புனரமைப்பதற்கு 5 தொகுதிகள் மாத்திரமே எஞ்சியுள்ளன. இந்த இரு மாகாணங்களிலும் எஞ்சியுள்ள வீதிகளில் 11 வீதிகளின் அனர்த்த நிலைமை குறித்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் சேதமடைந்துள்ள 36 வீதிகளில் 32 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. வடமத்திய மாகாணத்தில் 15 வீதிகளில் 12 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாணத்தில் சேதமடைந்த 58 வீதிகளில் 56 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. வடக்கில் சேதமடைந்த 34 வீதிகளில் 32 வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் சேதமடைந்த 67 வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன.

தென் மாகாணத்தில் மிகக் குறைந்தளவான வீதிகளே சேதமடைந்துள்ளன. சேதமடைந்த 3 வீதிகளுமே புனரமைக்கப்பட்டுள்ளன. கிழக்கில் சேதமடைந்த 24 வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று பிரதேசத்தில் சேதமைந்த 16 வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளன.

வீதிகள் தவிர சுமார் 40 பாலங்களும் சேதமடைந்தன. அவற்றில் 40 பாலங்கள் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும் 10 பாலங்களின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. எஞ்சிய 18 பாலங்களும் படிப்படியாக புனரமைக்கப்படும் என்றார்.