அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களுக்கு டிசம்பர் 15க்கு பின் விசேட நடமாடும் சேவை – கமல் அமரசிங்க

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக  சேதமடைந்த வாகனங்கள் மற்றும் வாகனங்களுக்குரிய ஆவணங்கள் தற்போது சேகரிக்கப்படுகின்றன.  எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதியின் பின்னர் மாவட்ட மட்டத்தில் இது தொடர்பான விசேட நடமாடும் சேவையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து  திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில்   ஏற்பட்ட அனர்த்தங்கனால் பெரும்பாலான வாகனங்கள் சேதமடைந்துள்ளன. குறித்த தகவல்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வாகனங்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தி அவை பயன்பாட்டிற்கு உகந்ததா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

மேலும், அனர்த்த நிலைமை காரணமாக சிலரது வாகனங்கள் மற்றும் ஆவணங்களும் அழிவடைந்துள்ளன. அந்த தகவல்களையும் பெற்றுக்கொண்டு உரிய எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, தான் வசிக்கும் கிராம சேவகர் பிரிவின் கிராம உத்தியோகத்தருக்கு இது குறித்து அறிவிக்க வேண்டும். அவர் ஊடாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தெளிவுபடுத்தி பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்வதும் அவசியம். விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு பல்வேறு துறைகள் மூலம் சரியான அறிக்கைகளை பெற்றுக்கொள்வது இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு முக்கியமானது.

நிலவும் சூழ்நிலையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வருவதால், இது குறித்து அவதானம் செலுத்தி விசேட அலகொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, 0707188866 என்ற வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் .குறித்த வாகனங்கள் மற்றும் ஆவணங்களின் ஏதேனும் சாட்சிகள் தம்மிடம் இருப்பின், அந்த சாட்சிகளை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், அது எதிர்கால நடவடிக்கைகளுக்கு இலகுவாக அமையும் என்றார்.