நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தில் நேரத்தை ஒதுக்காது அரசாங்கம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பில் எழுந்த சர்ச்சையின் போது தனது கருத்தை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் மூன்று நாட்களுக்கு உரையாற்றுவதற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் 5ஆம் திகதி வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடியாது என்று அரசாங்கம் கூறியதால் கட்சித் தலைவர் என்ற ரீதியில் நானும் ஏனைய கட்சித்தலைவர்களும் 5ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படுமாக இருந்தால் விவாதம் இன்றி அதனை நடத்துவதற்கு இணங்கினோம்.
அதன்படி தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தை பயன்படுத்துவோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம். நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.



