நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நேற்று திங்கட்கிழமை (08) இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தல பகுதியில், எலகந்தயிலிருந்து ஹெந்தல நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரி – பாணந்துறை வீதியில் போதிநாகல சந்திக்கு அருகில், ஹொரணையிலிருந்து இங்கிரிய நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பாதசாரி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில், பாதசாரி ஹொரணை வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் காலி, கஹாவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





