காலி பியதிகவில் தொடருந்து – கார் மோதி விபத்து

காலி மாவட்டத்தின் பியதிகம புகையிரத கடவையில் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட விபத்தில், வெள்ள நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கார் ஒன்று ரயிலுடன் மோதி சேதமடைந்தது.

காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலே குறித்த காருடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக, குறித்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

வாகனத்தில் இருந்த நிவாரணப் பொருட்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.