சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்று வரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அனர்த்தத்தால் யாழ்ப்பாணத்துக்கு பாதிப்பில்லை என்று குறிப்பிட்டு அந்த மக்களையே தூற்றித் திரிகிறார். இதன் விளைவை அவர் வெகுவிரைவில் உணர்வார். பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்லாமல் புலம்பெயர் தேசத்தின் உறவுகளின் பணத்தில் கொழும்பில் தனி வீட்டில் சுகபோகமாக வாழ்ந்துக் கொண்டு இவர் ஏனையவர்களின் மீது குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார். இது எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனர்த்தத்தால் வடக்கு மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன. அனர்த்த நிலைமைகளின் போது முப்படை வீரர்கள் இன, மத பேதமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களைக்கூட காப்பாற்றியுள்ளனர். பாதுகாப்பு தரப்பினருக்கு கௌரவமளிக்கிறோம்.
உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கோ அல்லது இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையோ பார்க்க யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தராது, அந்த மக்களை கைவிட்டு கொழும்பில் புலம்பெயர் தேசத்தின் பணத்தில் அதிசொகுசு மாடி வீட்டில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் புலம்பெயர் தேச உறவுகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும்.
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை. அப்படிப்பட்டவர் தான் தற்போது யாழ்ப்பாணத்தில் எந்த பாதிப்பும் இல்லையென்று கூறுகின்றார். யாழ்ப்பாண மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இப்போது அந்த மக்களைத் தூற்றியும், கேவலப்படுத்தியும் திரிகின்றார். இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளோ, அவர்களின் நிகழ்ச்சி நிரல்களோ தெரியாது. இதன் பக்கவிளைவுகளை அவர் வெகுவிரைவில் உணருவார்.
எமது அமைச்சரையும் வாழ்த்த வேண்டும். அவர் மலையகத்தில் சேவை செய்ய வேண்டும். அங்கு அமைச்சர் இன்னும் உத்வேகத்தில் செயற்படுவார். சிலர் அரசியல் நோக்கத்திற்காக எமது அமைச்சரின் உடை தொடர்பில் கேலி செய்கின்றனர். ஆனால் அவர் ஒரு ஆடை கூட எடுக்காமலேயே யாழ்ப்பாணத்திற்கு விரைந்து வந்திருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் கூட உதவினர்.
மக்களுக்கான பணத்தை மக்களிடமே வழங்கி வருகின்றோம். ஆனால் சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் தனது தனிப்பட்ட கணக்கிற்கே பணத்தை பெற்றிருப்பார். ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என்றார்.



