தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறார். அதனால் இந்த அரசாங்கம் ஒருபோதும் தாஜுதீனின் கொலையாளிகளை கைது செய்யப்போவதில்லை. முடிந்தால் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு சவால்விடுகிறேன் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அலுவலகங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்றம், ஆணைக்குழுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் அலரிமாளிகையில் இருந்து 60 தொலைபேசி அழைப்புகள் நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு சென்றுள்ளன. அந்த தொலைபேசி அழைப்புகள் அலரிமாளிகையின் எந்த பிரிவில் என்பதை தேடிக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் அதனை தற்போது ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலாேசகராக இருப்பவரின் நிறுவனத்தினால் அதனை செய்ய முடியுமாகி இருந்தது. ஆனால் அதனை அவர் செய்யாமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார்.ஏனெனில் அவர் அன்று இருந்த ஆட்சியாளர்களின் சிறந்த நண்பனாக இருந்தார். அவ்வாறுதான் தாஜுதீனின் வழக்கு விசாரணைகளை தள்ளிப்போட்டார்கள்.
தற்போது அவர் ஜனாதிபதியிள் ஆலாேசகராக வந்துள்ளார். அதனாலே அரசாங்கம் தாஜுதீனின் கொலையாளிகளை கைதுசெய்யப்போவதில்லை என தெரிவிக்கிறோம். முடிந்தால், தாஜுதீனை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு சவால்விடுகிறேன். அவர்கள்தான் சாட்சிகளை அழித்தவர்கள். தொலைபேசி அழைப்புகளை மறைத்தார்கள். தற்போது ஜனாதிபதியின் ஆலாேசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசகராக இருப்பவர்கள் அனைவரும் தொண்டு அடிப்படையில் பணிபுரிகிறார்கள் என அரசாங்கம் தெரிவிக்கிறது. அது உண்மையாக இருக்கும். அவர்களுக்கு சம்பளம் எதுவும் வழங்காமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அதற்கு பதிலாக வேறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
நல்லாட்சியியை ஏற்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த நீங்கள், தற்போது சந்தர்ப்பவாத அரசியலை செய்கிறீர்கள். வைத்தியர் அனில் ஜயசிங்கவே அன்று கோட்டாபய ராஜபகஷ்வின் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்கும் குழுவில் இருந்து, அதனை நியாயப்படுத்தி வந்தார். எரிப்பது சரி என தெரிவித்தவர். தற்போது அவர் சுகாதார அமைச்சின் செயலாளராக இருக்கிறார். அமைச்சர் நளிந்தவும் நானும் அதற்கு எதிராக குரல்காடுத்து வந்தோம். அப்படியிருக்கையில், அமைச்சர் நளிந்த நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்வர்களை வைத்துக்கொண்டு எவ்வாறு தற்போது நல்லாட்சி தொடர்பில் கதைக்கிறார்கள் என எமக்கு புரியாமல் இருக்கிறது.
அதேபோன்று சுங்கத்தில் இருந்து எந்த விசாரணைளும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள தெரிவுக்குழு அமைக்க சபாநாயகர் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் தெரிவித்திருந்தார். தற்போது அதுதொடர்பில் சபாநாயகர் எதுவும் கதைப்பதில்லை. தெரிவுக்குழு அமைக்க ஏன் அச்சப்படுகிறீர்கள். இந்த கொள்கல்களை விடுவிக்க உதவிசெய்த சுங்க பணிப்பாளருக்கு 60 வயது தாண்டிய பின்னரும் சேவை நீடிப்பு வழங்கி இருக்கிறார். ஆனால் பிமல் ரத்நாயக்கவை அந்த அமைச்சுப்பதவில் இருந்து நீக்கி இருக்கிறது. அப்படியிருக்கையில் எவ்வாறு நல்லாட்சி அமைக்க முடியும் என கேட்கிறேன் என்றார்.





