தொல்பொருள் ஆணைக்குழுவில் இணைய சிறுபான்மையினர் விரும்பவில்லை

தொல்பொருள் தொடர்பான  ஆணைக்குழுவில்  உறுப்பினராக இணைவதற்கு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் துறைசார் நிபுணர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. கடந்த கால தவறான அனுபவங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் .  உங்களிடம் சிறந்த  பரிந்துரைகள் காணப்படுமாயின் அவற்றை முன்வையுங்களெனன  என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க ,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவீன தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய  பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன், அண்மையில் நியமிக்கப்பட்ட  தொல்லியன் ஆணைக்குழுவுக்கு சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் இல்லை என்று அதிருப்தி தெரிவித்தார்.இதற்கு பதிலளிக்கையில்  சபை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், தொல்லியல் ஆணைக்குழுவுக்கு  அண்மையில் 17 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே இனம் மற்றும் ஒரே மதத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இனவாதம், மதவாதம் இருப்பதற்கான அடிப்படையாகவே இதனை பார்த்தோம். ஆனால் நீங்கள் நியமித்த அந்த ஆணைக்குழுவிலும் ஒரே இனம் ஒரே மதம் சார்ந்தவர்கள் இருந்தால் நாங்கள் என்ன நினைப்பது. நீங்கள் முற்போக்கானவர்கள். ரோஹன விஜேவீர, சேகுவேரா போன்றோரின் தத்துவங்களின் அடிப்படையிலானவர்கள் என்றால் தொல்லியல் ஆணைக்குழு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இதன்போது பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க , தொல்லியல் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படும் போது இன ரீதியில் நாங்கள் பார்க்காவிட்டாலும் அதில் இப்போது சிறுபான்மை இனத்தை சேர்ந்த மூவர் இருக்கின்றனர். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

அதில் இணைவதற்கு புத்திஜீவிகள் பலர் விரும்பமின்மையை தெரிவிக்கின்றனர். இணைக்கப்பட்ட சிலருக்கும் பல்வேறு தடவைகள் கூறியே அதில் இணைந்தனர். இதற்கு வரலாற்றில் இருந்த பிழையான அனுபவங்கள் காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நான் அமைச்சர் சுனில் செனவிக்கும் கூறியிருந்தேன். இதன்படி இப்போது 19 பேரில் மூவர் நீங்கள் கூறும் பிரதேசத்தில் இருந்து உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் கடும் முயற்சிகளுக்கு மத்தியிலேயே உள்ளீர்த்தோம். உங்களிடம் யோசனைகள் இருந்தால்  அவற்றை முன்வையுங்கள் . உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றார்.