புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

சட்ட விதிமுறைகளை மீறி நியமனம் வழங்கியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்பொலவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

சந்தேகநபருக்கு தலா  10 இலட்சம் ரூபா ரூபா பெறுமதியான  இரு சரீரப் பிணைகள்  விதித்து கொழும்பு  பிரதான நீதவான் நீதிமன்ற  நீதவான் அசங்க எஸ்.போதரகம பிணை வழங்கி  உத்தரவிட்டிருந்தார்.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தால் 2020 பெப்ரவரி 11ஆம் திகதி முன்வைக்கப்பட்ட  முகாமைத்துவ பீட அறிக்கைக்கு அமைய  அவ்வருடம் பெப்ரவரி 13 மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெற்ற நிர்வாக சேவை கூட்டத்தின் போது, ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு  அறிவிக்கப்பட்டிருந்த போதும் , சட்ட விதிமுறைகளை புறக்கனித்து  கே.துலானி அனுபாமா  என்பவருக்கு  புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்துடன் இணைந்து செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்றில் நியமனம் வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்  தனியார் நிறுவனத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்று சுமார் ஒரு வருடத்துக்கும் அதிக காலம் பணியாற்றியுள்ளார்.  அப்பெண்ணுக்கு சாதகமாக அமையும் வகையில், சேவை காலத்தில் சம்பளம் மற்றும்  கொடுப்பனவுகள் என்பன வழங்கப்பட்டுள்ளதாக  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இந்நிலையில் சட்ட விதிமுறைகளை மீறி நியமனம் வழங்கியமை மற்றும் சம்பளம் உள்ளிட்ட  கொடுப்பனவுகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் முகாமைத்துவ பீட  தலைவருமான  அனுர வல்பொல கைது செய்யப்பட்டார்.

திங்கட்கிழமை (17)  காலை 9.10 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணைப்  பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்திருந்தனர்.  கைது நடவடிக்கையை தொடர்ந்து  திங்கட்கிழமை பிற்பகல் சந்தேகநபரான அனுர வல்பொல இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். சந்தேகநபர் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில்  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மற்றும் பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ஆகியோரால் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதவான் சந்தேகநபரான அனுர வல்பொலவை தலா  10 இலட்சம் ரூபா ரூபா பெறுமதியான  இரு சரீரப் பிணைகள் விதித்து  பிணையில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார். மேலும் சந்தேகநபருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தும் கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் பிணை நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதவான் இதன்போது  உத்தரவிட்டிருந்தார்.