பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு மருத்துவ முகாம்

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு நுவரெலியாவில் மருத்துவ முகாம் இன்று வெள்ளிக்கிழமை (05) நடத்தப்பட்டது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளை நோய் நிலைமைகள் இருந்து பாதுகாக்க அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் கால்நடை தீவனம் வழங்குவதற்காக இந்த விசேட மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் முதல் கட்டம் இன்றைய தினம் நுவரெலியா மாநகர சபையின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பு இலங்கை குதிரை சங்கத்தால் வழங்கப்பட்டது.

இந்த சேவைக்கு இலங்கை குதிரை சங்க உறுப்பினர்கள் மற்றும் விலங்கு பிரியர்கள் ஏராளமானோர் நிதி பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பேரிடர் நிலைமை தணிந்து சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்கு மீண்டும் வருகை தரும் வரை இந்த மருத்துவ சேவைகள் பல கட்டங்களாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நுவரெலியா நகர எல்லை முழுவதும் குதிரை சுற்றுப்பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் 150க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சத்தான விலங்கு உணவு மற்றும் மருந்துகள் 50 குதிரைவண்டி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

இவ்வாறு கையளிக்கப்பட்ட விலங்கு உணவு பத்து நாட்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு போதுமானது. எதிர்காலத்திலும் விலங்கு உணவு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை பேரழிவுகள் காரணமாக விலங்குகள் பாதிக்கப்பட்டால் பயன்படுத்த ஒரு அளவு மருந்து மற்றும் தடுப்பூசிகளும் குதிரைவண்டி சவாரி செய்பவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ முகாம் மற்றும் விலங்கு உணவு விநியோக நிவாரண சேவையில் பயனடைந்த குதிரை உரிமையாளர்கள்,

நாடு முழுவதும் பேரிடர் காலத்தில் பல்வேறு நிவாரண சேவைகள் வழங்கப்பட்ட போதிலும், இலங்கை சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய பலமாக இருக்கும் குதிரை உரிமையாளர்களை நாடு மறந்துவிட்டது. இலங்கை குதிரை சங்கம் செய்த உதவிகளுக்குபெரிதும் பாராட்டுகிறோம்.

நாட்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களின் போது விலங்குகளைப் பராமரிப்பது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது,

எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க நாங்கள் செலவிடும் அதே அளவு பணத்தை இந்த விலங்குகளுக்காக செலவிட வேண்டியிருந்தது, மேலும் எங்கள் துக்கத்தை வெளிப்படுத்த யாரும் இல்லாமல் தவித்தோம்,

அப்போதுதான் எங்களுக்கு சில ஆதரவை வழங்குமாறு இலங்கை குதிரை சங்கத்திடம் உதவி கோரினோம்.

சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வந்து எங்கள் பொருளாதாரம் வலுவடையும் வரை அவர்கள் எங்களுக்கு அளித்த உதவிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

அரசாங்கத்தால் உதவிகள் கிடைக்காமைக்கு மிகவும் வருத்தம் அடைகிறோம்.

அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் உதவி கிடைத்தால், எங்களால் முடிந்த அதிகபட்ச ஆற்றலைப் பயன்படுத்தி சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த பாடுபடுவோம்.