வானிலை முன்னறிவிப்புக்கு அமைய எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதால் நாட்டின் பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களை குறைத்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் நாச்சதுவ, ராஜாங்கனை, தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹெர, வெஹெரகல மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்க சமுத்திரம் ஆகிய இடங்களில் நீர் மட்டத்தைக் குறைக்க தற்போது நீர்; திறந்து விடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியிடப்படும் நீரின் அளவு கீழ் பகுதிகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால்,இந்த நிலைமைகளைக் கண்காணிக்க நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகங்கள் 24 மணித்தியாலமும் திறந்திருப்பதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, எதிர்கால நிலைமைகள் குறித்து விழிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பருவமழை தற்போது தொடங்கியுள்ளதால், இது தொடர்பாக விழிப்புடன் இருப்பது முக்கியம் என்றும், தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, செயற்படவேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.





