வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாம் போராடி வருகின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தில் வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் 210 பேர்ச் காணி இதற்காக ஒதுக்கப்பட்டது. அந்தக் காணியை தற்போது மீள சுவீகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. தமிழ் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையைப் பறிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் வத்தளை பிரதேச சபை உறுப்பினர் காளிமுத்து தர்மரத்னம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (31) வத்தளை நகரசபையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த காணியை அரசாங்கத்தால் மீள சுவீகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
2002ஆம் ஆண்டு வத்தளை – ஒலியாமுல்ல பிரதேசத்தில் வத்தளையில் தமிழ் பாடசாலையொன்றை அமைப்பதற்காக 210 பேர்ச்சஸில் காணியொன்று ஒதுக்கப்பட்டது. வத்தளையில் தற்போது சுமார் 9000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். 33,000 பதிவு செய்யப்பட்ட வாக்குகள் காணப்படுகின்றன.
ஆனால் இதுவரைக் காலமும் 1 – 13ஆம் வகுப்பு வரை முழுமையான ஒரு தமிழ் பாடசாலை கூட அமைக்கப்படவில்லை. இது தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பாரிய நெருக்கடியாகவுள்ளது. முதலாம் தரத்திலிருந்து ஐந்தாம் தரம் ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கற்று, அதன் பின்னர் வெவ்வேறு பாடசாலைகளுக்கு செல்லவேண்டிய துரதிர்ஷ்டமான நிலைமையை தமிழ் மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர். இதற்காக காலம் காலமாக நாம் போராடி வந்த நிலையில், 2018இல் எமது போராட்டத்துக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றது.
இது நகரசபைக்கு சொந்தமான காணியாகும். 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அப்போதைய அமைச்சர்களான சந்திரசேகர் மற்றும் தொண்டமான் ஆகியோர் இந்த பாடசாலையை அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தனர். அந்த நடவடிக்கைகளும் இழுபறி நிலையிலேயே காணப்பட்டன. எனினும் 2018இல் அப்போதைய அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தலையீட்டின் கீழ் இந்தக் காணி பாடசாலைக்காக என ஒதுக்கப்பட்டது.
நகரசபையின் கீழ் காணப்பட்ட குறித்த காணி மாகாண கல்வி திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு, பிரதேசசபை அலுவலகத்தின் ஊடாக வலய கல்வி திணைக்களத்து வழங்கப்பட்டது. காணி ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அதில் பாடசாலையை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதனை அடிப்படையாகக் கொண்ட இனவாத பிரச்சினைகள் சிலரால் ஏற்படுத்தப்பட்டன. அதேவேளை அந்த சந்தர்ப்பத்தில் நிதி பற்றாக்குறையெனக் கூறி பாடசாலை நிர்மாணப்பணிகள் காலம் தாழ்த்தப்பட்டன.
எனினும் நாம் எமது சொந்த நிதியை வழங்குவதாகக் கூறிய பின்னர், அதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் சில தரப்பினரால் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திட்ட வரைபடமும் தயாரிக்கப்பட்டது. 2019இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அதன் பின்னரான கொவிட் பரவல் மற்றும் அரசியல் கிளர்ச்சிகளால் இதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் மொழி ரீதியாக பாடசாலைகளை அமைப்பதில்லை என்பது தமது கொள்கையெனக் கூறி, இந்தக் காணியை மீள கையகப்படுத்த முயற்சிக்கிறது. கடந்த வருடமாக இதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், இந்த காணியை மீள கையகப்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் தமிழ் உறுப்பினர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை. நகரசபைத் தலைவர் கூட்டம் நிறைவடைய முன்னரே அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னர் இந்த காணியை அரசாங்கம் மீள சுவீகரிப்பதற்கான யோசனையை முன்வைத்து, அனுமதியை பெற்றனர். எனினும் நீண்ட விவாதத்தின் பின்னர் தற்காலிகமாக இந்த யோசனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது பிரதான வீதிக்கு அருகிலுள்ள காணியாகும். ஆனால் அரசாங்கத்தால் இதுவரையில் எந்தவொரு திட்டமும் இங்கு முன்னெடுப்பதற்கு முன்மொழியப்படவில்லை. காணியை கையகப்படுத்திய பின்னர் ஏதேனும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவே திட்டமிடுகின்றனர். அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய இந்த காணி மீளப் பெறப்பட்டால் வத்தளையில் தமிழ் பாடசாலைக்கான எமது 25 ஆண்டு கால போராட்டம் தோல்வியடையும். அவ்வாறு தோல்வியடைவதற்கு இடமளித்துவிடக்கூடாது என்றார்.





