70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண திட்டத்தை நாணய நிதியம் அங்கீகரிக்குமா?

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது கடன் தவணையை பெறுவதில் அரசாங்கம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. அரசாங்கம் முன்வைத்த வெள்ள நிவாரணத்திற்கான சுமார் 70 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்,  சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு கூட்டம் எதிர்வரும் 15ம் திகதி திங்கட்கிழமை வாஷிங்டனில் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு ஐந்தாவது கடன் தொகையை விடுவிப்பது குறித்து இறுதி முடிவு இதன்போதே எடுக்கப்பட உள்ளது.

வெள்ள நிவாரணத்திற்காக சுமார் 70 பில்லியனை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும், உடனடியாக வெள்ளப் பேரழிவுக்கு வரிப் பணத்தைப் பயன்படுத்துவது பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அது பொருளாதார நெருக்கடியை மேலும் ஆபத்தான சூழ்நிலைக்கு இட்டுச் செல்லக்கூடும் என்றும் நாணய நிதியம்  சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், சேதம் குறித்த குறிப்பிட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு, பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, 70 பில்லியன் ரூபா நிவாரண திட்டத்தை ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

இதேவேளையில், இலங்கையின் திடீர் பேரழிவைச் சமாளிக்க ஒரு சிறப்பு நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக நாணய நிதிய அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இலங்கையை ஆதரிக்கும் சர்வதேச நாடுகளை அழைத்து ஆதரவு மாநாட்டைக் கூட்டுவதற்கு அரசாங்கம் முன்முயற்சி எடுக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினர். இதனூடாக சேதமடைந்த பாலங்கள், வீதிகள்  மற்றும் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பொருட்படுத்தாமல், அரசாங்கம் மக்களுக்கு 70 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்தால், அது இரு தரப்புக்கும் இடையே கருத்து மோதலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால், 15 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் ஐந்தாவது கடன் தவணையை நாணய நிதியம் ஒத்திவைக்கக் கூடும். இந்தக் குழப்பமான சூழலில், கடந்த  வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுக்கும் இடையே ஒரு சிறப்பு தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. எனினும், நிதி விடுவிப்பு தொடர்பாக எந்த ஒரு இறுதியான உடன்பாடும் இதன் போது எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.