தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட 5 இடங்களில் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
அதனை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-புயல் அபாயத்தை தொடர்ந்து கரை ஒதுங்கிய தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் உள்பட 12 தமிழக மீனவர்கள் மாலத்தீவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அதற்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்பதற்காக கடிதம் எழுதி உள்ளேன்.நிச்சயமாக இன்று ஒன்றிய அமைச்சரை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்வேன். விரைவிலேயே அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மறுபடியும் அவர்கள் தூத்துக்குடிக்கு வந்து அவர்களது குடும்பங்களை வந்து சேர வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்து அவர்கள் மீட்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம்
என்றார்.இதுபோன்ற பிரச்சனைகள் மாலத்தீவிலும் தொடர்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., இலங்கை-தமிழக மீனவர்கள் பிரச்சனையை அங்குள்ள மீனவ அமைப்புகளோடு இங்குள்ள மீனவ அமைப்புகளும் பேசி அதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறாத சூழல் உள்ளது. அதை மறுபடியும் தொடர்ந்து நடத்தினாலே இப்பிரச்சனைகள் தீர்க்க முடியும்.ஒவ்வொரு இடத்திலும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மிகப்பெரிய போராட்டத்திற்கும் பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவதும், படகுகளை பிடித்து வைத்துக்கொள்வதும் அவர்களது வாழ்வாதாரங்களை பறிப்பது என்பது தொடர்கதையாக மாறிக்கொண்டிருக்க கூடிய சூழலில் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். மீனவர்களை பாதுகாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
பேட்டியின்போது தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.