மாமல்லபுரம்:சர்வதேச நாடுகளில் உள்ள சரித்திர கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் அந்த பகுதியின் பழமை, கலாசாரம், வாழ்க்கை முறையை உணர்த்துகின்றன. அத்தகைய நினைவு சின்னங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.
அவற்றை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடை பிடிக்கப்படுகிறது.
பாரம்பரிய வாரம் நேற்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் மட்டும் நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று காலை 8 மணி முதல் சுற்றுலா வந்த வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் நுழைவு கட்டணம் எடுக்காமல் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். பள்ளி மாணவர்களும் அதிக அளவில் இலவச அனுமதியை பயன்படுத்தி சுற்றுலா வந்த அவர்கள் ஆர்வமுடன் புராதன சின்னங்களை கண்டுகளித்து சென்றனர்.குறிப்பாக ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணிகள் 50 பேர் நேற்று குழுவாக சுற்றுலா வந்தனர்.
அவர்கள் தலா ஒருவருக்கு ரூ.600 கட்டணம் செலுத்தாமல் இலவசமாக சுற்றி பார்த்துவிட்டு சென்றனர். இலவச அனுமதியால் அந்த ஜப்பான் நாட்டு குழுவினருக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் மிச்சமானது. இலவச அனுமதியால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்று மாலை 6 மணியுடன் இலவச அனுமதி முடிவுற்றது என்றும், இன்று (திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் சுற்றுலா வரும் பயணிகள் ரூ.40 நுழைவு கட்டணம் செலுத்திதான் புராதன சின்னங்களை காண முடியும் என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.