இம்ரான் கான் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டம்- ராவல்பிண்டியில் ஊரடங்கு உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் அவரது கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ராவல்பிண்டி நகரில் இம்ரான்கான் கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து ராவல்பிண்டியில் நாளை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகையான கூட்டங்கள், உள்ளிருப்புப் போராட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறையில் உள்ள இம்ரான்கானை இன்று அவரது சகோதரி உஸ்மா மற்றும் ஒரு வக்கீல் மட்டும் சந்திக்க நிபந்தனையுடன் சிறைத்துறை அனுமதி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.