நாட்டுக்காக கடுமையாக உழைப்பேன் என உறுதி மொழி எடுத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சிக்கு, இந்தாண்டுக்கான சிறந்த வாசகம் விருது கிடைத்துள்ளது.
நீண்ட பணி நேரத்துக்கு புகழ் பெற்ற நாடு ஜப்பான். இங்குள்ள பெண்கள் வீட்டு வேலைகளுடன், அலுவலக பணிகளையும் மேற்கொண்டு கடுமையாக உழைக்கின்றனர். இந்நிலையில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது அவர் எம்.பி.க்களிடம் பேசுகையில், ‘நீங்கள் குதிரையை போன்று பணியாற்ற வேண்டும். பணியும் – வாழ்க்கையும் சமநிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை நான் கைவிடுவேன். எனது நாட்டுக்காக , நான் வேலை, வேலை, வேலை என கடுமையாக உழைப்பேன் என கூறினார்.
இவரது பேச்சும், ஸ்டைலும் ஜப்பான் மக்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இவர் பயன்படுத்தும் கைப்பை, பேனா ஆகியவற்றின் பிராண்டுகளும் பிரபலம் அடைந்து விற்பனையை அதிகரிக்கின்றன. இவர் ஜப்பான் பெண்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.
இந்நிலையில் அவர் கூறிய “நாட்டுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்’ என்ற வாசகத்தை இந்தாண்டு சிறந்த வாசகமாக தேர்வு செய்து தனியார் அமைப்பு ஒன்று டாகாய்ச்சிக்கு விருது வழங்கியுள்ளது.
இந்த விருதை ஏற்றுக் கொண்ட டகாய்ச்சி கூறுகையில், “எனது ஆர்வத்தை வலியுறுத்தவே நான் விரும்பினேன். மற்றவர்கள் அதிக நேரம் பணியாற்ற வேண்டும் என்பதை ஊக்குவிப்பதா, நீண்ட நேரம் பணியாற்றுவது நல்லது என்று கூறுவது எனது நோக்கம் இல்லை. நான் கூறியதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்” என கூறினார்.




