இந்தியாவின், வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா கடற்கரைப் பகுதியில் செயல்பட்டு வந்த இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பரிதாபகரமான தீ விபத்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதி ஊழியர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் விடுதியில் தங்கியிருந்த ழூ4 சுற்றுலா பயணிகளும் தீக்கிரையானதாகழூ தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தீ விபத்து முதன்மையாக சமையல் அறை பகுதியில் ஏற்பட்டதாகவும், அங்கே ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு தீ பரவலுக்குக் காரணமாக இருந்ததாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணிகளிலும், சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் அப்பகுதி எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று நிலைமையை மதிப்பாய்வு செய்துள்ளனர்.
சம்பவத்துக்கான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த துயரச் சம்பவம் கோவா சுற்றுலா பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த நிலையில், கோவா தீவிபத்து குறித்து இந்தியப் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவா அர்போராவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 பேர் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்து குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்திடம் கேட்டறிந்தேன். காயமடைந்தோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



