இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயல் பேரழிவுக்கு மனிதாபிமான உதவி அனுப்ப பாகிஸ்தான் இந்திய வான்வழியை பயன்படுத்த அனுமதி கோரியதற்கு இந்தியா உடனடியாக அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக பி.ரி.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்தியாவால் அனுமதி மறுக்கப்பட்டதாகப் பல பாகிஸ்தானிய ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்திகள் “பொய்யானவை” என்றும் “ உண்மைக்கு புறம்பானவை” என்றும் இந்திய வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பாகிஸ்தான் தனது அதிகாரப்பூர்வ கோரிக்கையை இந்திய நேரப்படி திங்கட்கிழமை (1) மதியம் 1.00 மணியளவில் சமர்ப்பித்தது. அதில் இலங்கைக்கான மனிதாபிமான உதவியை அனுப்புவதற்காக இந்திய வான்வழியை பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்டது. பாகிஸ்தானின் கோரிக்கை பெறப்பட்ட உடனே தேவையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடும் சூறாவளி தாக்கத்தால் பல மாவட்டங்கள் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் உதவி விமானங்களுக்கு இந்தியா எவ்வித தாமதமுமின்றி அனுமதி அளித்துள்ள நிலையில், இந்திய தரப்பின் இந்த விளக்கத்துடன், இரண்டு நாடுகளுக்கிடையே பரப்பப்பட்ட தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது,
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு அனர்த்த நிவாரண சேவைகளை வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராக உள்ள நிலையில் இந்தியா அதற்கு இடையூறு விளைவித்து வருவதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ தேவையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
நவம்பர் 29 ஆம் திகதி முதல், பாகிஸ்தான் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரிலும், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடனும், பாகிஸ்தான் ஆயுதப் படைகள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகளை வழங்க தயாராக உள்ளது.
எனினும், சி-130 விமானம் பறப்பதற்கான அனுமதியை இந்தியா தாமதப்படுத்தியதால், பாகிஸ்தானின் அவசரகால நிவாரண விமானம், இஸ்லாமாபாத்தில் உள்ள நூர் கான் விமானத் தளத்தில் (NKAB) இரண்டு நாட்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அவசரகால நிவாரண விமானம், வான்வெளியை பயன்படுத்த ஒரு நாள் மாத்திரமே செல்லுபடியாகும் என இந்தியா அனுமதி வழங்கியது. சுமார் 6 மணி நேரம் மட்டுமே இந்த அனுமதி செல்லுபடியாகும். இது கொழும்புக்குச் சென்று திரும்புவதற்குப் போதுமான கால அவகாசம் அல்ல. கால தாமதப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த செயல், ஐ.நா. வழிகாட்டுதல் கோட்பாடுகள் மற்றும் சார்க் மனிதாபிமான சாசனக் கொள்கைகள் ஆகியவற்றை மீறுவதாகும். எல்லா காலத்திலும் இலங்கை தனிமையாக இல்லை என்றும் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.






