சுவிட்சர்லாந்தில் ஆசிரியராக பணியாற்றிவந்த பிரித்தானியர் ஒருவர் சிறுபிள்ளைகளை மோசமாக நடத்தியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மூன்று வயதே ஆன பிள்ளைகளிடம் கூட கடுமையாக நடந்துகொண்டுள்ளார் அந்த ஆசிரியர்.
உணவும் தண்ணீரும் கொடுக்காமல், பிள்ளைகளை இருட்டறையில் அடைத்து வைத்ததாகவும், பிள்ளைகளைப் பார்த்து பயங்கரமாக சத்தமிட்டதாகவும் அவர் மீது சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.இந்த விடயங்கள் 2016க்கும் 18க்கும் இடையில் நடந்திருந்தாலும், அவர் பிள்ளைகளை நடத்திய விதத்தால் இப்போதும் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள் பெற்றோர்.
பிள்ளைகளுக்கு, படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரியவர்கள் யாராவது கொஞ்சம் சத்தமாக பேசினால் கூட, அது பிள்ளைகளை பாதிப்பதாகவும் பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
விடயம் என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியரான அந்த 56 வயது நபர் இப்போது சுவிட்சர்லாந்தில் இல்லை. அவர் பிரித்தானியாவுக்கே திரும்பிவிட்டார்.
அவரது சட்டத்தரணிதான் அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அவருக்கு 10 மாத சிறைத்தண்டனையும், சிறுபிள்ளைகளுடன் வேலை செய்ய வாழ்நாள் தடையும் விதிக்க கோரியுள்ளார்கள் அரசு சட்டத்தரணிகள்.




