2030 சந்திரனில் விண்வெளி பயணம் – ஓராண்டு கால விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும் சீனா!

வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக, சீனா தனது வரலாற்றிலேயே மிக நீண்ட கால விண்வெளிப் பயணம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது.

இதன்படி, மூன்று விண்வெளி வீரர்களைத் தாங்கிய ‘ஷென்சோ-23’ விண்கலம், இன்றையதினம் அந்நாட்டு நேரப்படி இரவு 11:08 மணிக்கு வடமேற்கு சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ‘லாங் மார்ச்-2எஃப் 23’ ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படத் தயாராக உள்ளது.

இந்த விண்வெளிப் பயணக் குழுவில் விண்வெளி பொறியியலாளர், விண்கல விமானி மற்றும் விண்வெளி ஆய்வாளர் என மூவர் அடங்கியுள்ளனர்.

கமாண்டர் சூ யாங்ஜு இந்தப் பயணத்தின் தளபதியாகச் செயல்படவுள்ளார். விமானி ஜாங் ஜியுவான் விண்கலத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். ஹொங்கொங்கின் முன்னாள் பொலிஸ் பரிசோதகரான இவர், சீனாவின் விண்வெளிப் பயணத்தில் பங்கேற்கும் ஹொங்கொங் பிராந்தியத்தின் முதலாவது விண்வெளி வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கிறார்.

விண்ணில் உள்ள சீனாவின் ‘தியாங்காங்’ விண்வெளி நிலையத்தை இந்த விண்கலம் சென்றடைந்ததும், இந்த மூவரில் ஒருவர் ஒரு முழு வருடத்திற்கு (365 நாட்கள்) அங்கேயே தங்கியிருந்து விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டவுள்ளார்.

அந்த நபர் யார் என்பது விண்வெளிப் பயணத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னர் தீர்மானிக்கப்படும் என சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள் சந்திரனில் மனிதர்களை இறக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கிச் சீனா வேகமாக முன்னேறி வரும் நிலையில், அமெரிக்காவுடனான விண்வெளிப் போட்டி தற்பொழுது தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அமெரிக்காவின் நாசா  விண்வெளி நிறுவனம் தனது ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் கீழ் 2028 ஆம் ஆண்டிற்குள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்ப இலக்கு நிர்ணயித்துள்ளது.

இம்முறை தியாங்காங் விண்வெளி நிலையத்தில் ஓராண்டு தங்கியிருக்கும் வீரரின் உடல்நிலை மாற்றங்கள், கதிர்வீச்சுத் தாக்கம் மற்றும் விண்வெளியில் எலும்பு அடர்த்தி குறைபாடு போன்ற மனித உடலியல் மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வது மற்றும் இனப்பெருக்கம் செய்வது குறித்து ஆராய்வதற்காக, உலகின் முதலாவது விண்வெளி அடிப்படையிலான மனித “செயற்கைக் கரு” மற்றும் தண்டுவடம் சார்ந்த பரிசோதனைகளையும் சீனா இம்முறை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.