நேற்று டிசம்பர் 2ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்திருந்தது.
கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்காவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வரும் மதவாத அமைப்புகள் இத்தீர்ப்பை வரவேற்றன.
இந்நிலையில்தான் தீர்ப்பை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் இன்று மதியம் முதல் இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடந்தது.
இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இச்சூழலில் தான் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வழக்கமாக கடந்த பல ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வந்த உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றாமல் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவதன் மூலம் சமய நல்லிணக்கத்தை சீர் குலைக்க முயலும் மதவாத சக்திகள் திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டுத் தலத்தை வன்முறை களமாக மாற்றத் துடிப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் அரசியல் ஆதாயம் அடைவதற்கு திருப்பரங்குன்றத்தில் சமூக அமைதியை கெடுக்க முயல்வதை அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டு மக்களும் அதற்கு இடம் தர மாட்டார்கள்.
காலம் காலமாக பின்பற்றப்படும் மரபுகளை மீறி மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் இந்துத்துவ மதவாத சக்திகளை தமிழ்நாடு அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.




