ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் கடந்த ஜூலை மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதோடு பசுபிக் பெருங்கடலில் சுனாமி அலை எழுந்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அப்போது எழுந்த சுனாமியின் முழு அலை தோற்றத்தையும், செயற்கைக்கோளைக் கொண்டு தெளிவாக எடுத்த காட்சிப் பதிவை தற்போது நாசா வெளியிட்டுள்ளது.
SWOT (Surface Water and Ocean Topography) என்ற செயற்கைக்கோளே இந்த சுனாமி புகைப்படத்தை எடுத்திருக்கிறது. நாசா மற்றும் பிரெஞ்சு ஏஜென்சியின் கூட்டுமுயற்சியில் உருவான இந்த செயற்கைக் கோள் ஆறுகள், ஏரிகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டது.
கம்சட்கா தீபகற்ப பகுதியில் 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, பசுபிக் கடலிலும் இலேசான சுனாமி கிளம்பியபோது, SWOT செயற்கைக்கோள் தற்செயலாக சுனாமி எழுந்த கடற்பரப்புக்கு மேல் கடந்து சென்றது. அப்போது சுனாமியின் முழு அலை வடிவத்தையும் மிகத் தெளிவாக படமெடுத்தது.
சுனாமியை மிக உயர்ந்த தெளிவாக படமெடுத்த முதல் செயற்கைக்கோளாக SWOT கருதப்படுகிறது.
சுனாமி என்பது ஒற்றை அலையாக, சீராக சிதறாமல் மேலெழும்புவதாக இதுவரை விஞ்ஞானிகள் கூறிவந்த நிலையில், சுனாமி ஆற்றலால் நடுக்கடலில் அலைகள் பிளவுபட்டு, சிதறி, பின்னர் மீண்டும் உருவாகும் என்பதையும் சுனாமியானது சிக்கலான ஆற்றல் வடிவத்தை கொண்ட ஓர் இயற்கைப் பேரனர்த்தம் என்பதையும் இந்த செயற்கைக்கோள் துள்ளியமான படத்தின் ஊடாக காண்பித்துள்ளது.





