பிரதேச செயலகப் பிரிவுகளில் இயற்கைப் பேரிடரால் 1710 குடும்பங்களைச் சேர்ந்த 5443 பேர் பாதிக்கப்பட்டு 59 பாதுகாப்பு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வந்த நிலையில் சீரான காலநிலையைத் தொடர்ந்து தற்போது பாதுகாப்பு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் பலரும் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.
இந் நிலையில் தற்போது 354 குடும்பங்களைச் சேர்ந்த 1114 பேர்கள் 12 பாதுகாப்பு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் பிரதேச செயலாளர்களால் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாகவும், 3715 குடும்பங்களைச் சேர்ந்த 11, 751 பேர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடகச் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தம் காரணமாக யாழ் மாவட்டத்தில் இரண்டு வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் 370 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 31 மீன்பிடிப் படகுகள், 30 வலைகள் சேதமடைந்துள்ளதாகப் பிரதேச செயலாளர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.



