நாட்டில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை கொள்வனவு செய்ய ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுமென சிறிலங்கா ஜனாதிபதி நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இதேவேளை, சொந்த வீடுகளில் அல்லது வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும், அவர்களது வீடுகளின் உரிமை தொடர்பில் கருத்திற் கொள்ளாது ஒரு தடவை மாத்திரம் செலுத்தப்படும் இக்கொடுப்பனவு வழங்கப்படுமென அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அனர்த்தங்களால் பாதிப்புற்று, முகாம்களில் தங்கியிருக்கின்ற குடும்பங்கள், அதில் தங்கியிருக்க விருப்பமில்லை எனின், 3 மாதங்களுக்கு மாதாந்தம் தலா ரூ. 25,000 கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக 5,165 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 55,747 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், 1.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
மண்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழ்பவர்கள் வாடகை வீட்டில் வசிப்பதற்கு மூன்று மாதத்துக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும். குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்களாயின் 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.
விவசாய உற்பத்தியை மேம்படுத்த ஒரு ஏக்கர் நிலத்துக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். அழிவடைந்துள்ள 1 இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் மீண்டும் விவசாய நிலமாக மாற்றப்படும்.
அதேபோல் மரக்கறி உற்பத்திக்கு 1 ஏக்கர் நிலத்துக்கு 2 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
பாதிக்கப்பட்டுள்ள விலங்கு வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு 2 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
வங்கி அடிப்படையில் தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். அதற்குரிய சுற்றறிக்கையை மத்திய வங்கி வெளியிடும்.
காப்புறுதி நிறுவனங்களும் நிவாரணம் வழங்கும் அதற்குரிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும்.
பதிவு செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் ஒரு படகுக்கு தலா 4 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
பாடசாலை மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும். அஸ்வெசும திட்டத்தின் ஊடாக 6 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும். எமது மாணவர்களுக்கு நாங்கள் வழங்குவோம். கல்விக்கான நிதி செலவல்ல, அது சிறந்த முதலீடு.
வர்த்தக கட்டிடங்கள் சேதமடைந்திருந்தால் மதிப்பீடுகளுக்கு அமைய 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு, வீடு கட்டிக் கொள்வதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும். காணி இல்லையாயின் பாதுகாப்பு பகுதிகளில் அவர்களுக்கு காணி வழங்கப்படும். அரச காணி இல்லாவிடின் காணி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கு உயர்ந்தபட்சமாக 25 இலட்சம் ரூபா வழங்கப்படும். அதேபோல் உயிரிழந்தவர்களின் உயிரை மதிப்பிட முடியாது. இருப்பினும் அவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்படும்.



