பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் உள்ள குவாடலூப் பகுதியில் கிறிஸ்துமஸ் நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் போது ஒரு நபர் கூட்டத்திற்குள் வாகனத்துடன் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sainte-Anne பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் 10 பேர் மரணமடைந்ததுடன் 9 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.
Schoelcher சதுக்கத்திலேயே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. மட்டுமின்றி, இந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கையில், அந்த சாரதிக்கு மருத்துவ அத்தியாவசியம் ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், உண்மையில் அந்த சாரதிக்கு அப்படியான நிலை ஏற்பட்டதா என்பது தொடர்பில் அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.
மட்டுமின்றி, சம்பவத்திற்கு பிறகு அந்த சாரதி சம்பவ இடத்திலேயே காணப்பட்டுள்ளார். தகவலை அடுத்து சம்பவயிடத்தில் தீயணைப்பு வீரர்கள், மருத்துவ உதவிக் குழுக்கள் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாகவே, கிறிஸ்துமஸ் காலங்களில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நடந்து வருகிறது.
பெரும்பாலும், ஐ.எஸ் ஆதரவு நபர்கள் அல்லது குழுவினர் இதுபோன்ற மோசமான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால், தற்போது குவாடலூப் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பில் இதுவரை அதிகாரிகள் தரப்பு உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை.



