நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று (6) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் – குடியிருப்பு வீதியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், 10 வயது சிறுவன், மற்றொரு பெண் என மூவர் காயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் சிறுவன் ஆகிய இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பெண்ணின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மொரோந்துடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜயவர்தனபுர வீதியில் குருந்த பகுதியில் பண்டாரகமவிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அவ்விபத்தில் பலத்த காயமடைந்த பயணி களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மடபத்த பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலம் கோனதுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மொரோந்துடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





