தித்வா புயல் காரணமாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தில் புசல்லாவை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்லும் மார்க்கத்தில் இரட்டைப்பாதை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதற்கப்பால் வவுக்கப்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவால் அப்பிரதேசம் வரை மாத்திரமே வாகனங்கள் செல்ல முடியும்.
அதே போன்று நுவரெலியாவிலிருந்து வரும் மார்க்கத்தில் தவலந்தன்னை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வழியும் மூடப்பட்டிருப்பதால் நுவரெலியா – கண்டி மார்க்கம் கடந்த ஒன்பது நாட்களாக மூடப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதியிலிருந்து புசல்லாவை நகருக்கு மின்சார விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு நாட்களுக்கு முன்பே குடி நீர் விநியோகமும் சீரடைந்துள்ளது.
கம்பளை மற்றும் நுவரெலியா, பூண்டுலோயா மார்க்கத்தில் நகருக்கு வருவதற்கு கொத்மலை அணைக்கட்டுப் பாதை, ரொச்சல் மற்றும் மாசுவெல தோட்ட பாதைகளை மக்கள் பாவித்து வருவதுடன் சிறிய பாதைகளில் முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலமாகவே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேன்களில் செல்வதற்கு திஸ்பனை சந்தியூடாக செல்லலாம் என்றாலும் அது நீண்ட தூர சுற்றுப்பாதை என்பதால் மிக அவசரமான நிலைமைகளில் மாத்திரமே இம்மார்க்கத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சிறிய ரக லொறிகள் வாகனங்களிலேயே நகரப்பகுதிக்கு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் கட்டுக்கித்துல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட சுமார் 150 பேர் இன்னும் புசல்லாவை நகர் பள்ளிவாசலில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான உணவை அங்கேயே சமைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மின்சாரம் இல்லாத காரணத்தினால் கையடக்கத் தொலைபேசிகள் செயலிழந்துள்ளன. நகரின் இருபக்கங்களுக்குமான வீதிகளும் மண்சரிவால் மூடப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் மற்றும் வர்த்தகர்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பளை – புசல்லாவை பாதை நேற்று (6) மாலை ஓரளவுக்கு வழமைக்கு திரும்பும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது வகுகப்பிட்டிய அருகில் பாரிய கல் ஒன்று மண் அகழ்வின்போது கீழ் நோக்கி சரிய வாய்ப்புள்ளதாகவும் அந்த கல்லை அகற்றினால் பாரிய அளவு மண்மேடு கீழ் நோக்கி சரிந்து விழ வாய்ப்பு உள்ளதாகவும் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனினும் நேற்று (6) இரவு பாதை திறந்து விடப்பட்ட சந்தர்ப்பத்தில் புசல்லாவை எரிபொருள் நிலையத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பவுசர்கள் வந்தன. இருந்தபோதும் கம்பளை – புசல்லாவை மார்க்கத்தில் முழுமையாக போக்குவரத்து செயற்பட இன்னும் இரண்டொரு நாட்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.





