வரப்போகும் தேர்தலில் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க.வும் மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் துடைத்தெறியப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறைகூவல் விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடக்கி வைத்துப் பேசும் நிகழ்ச்சியிலேயே இவ்வாறு பேசியிருக்கிறார். அரசுத் திட்ட விழாவில் கட்சி அரசியல் பேசுவது மரபுகளைக் காக்கத் தவறிய அடாத செயலாகும். குஜராத் மாநிலத்திற்குப் போய் முதல்வர் ஸ்டாலினுக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் எச்சரிக்கைவிடவேண்டிய அவசியம் என்ன? இரவும் பகலுமாக அமித்ஷாவின் சிந்தனையில் இவர்கள் இருவரும்தான் குடைச்சல் செலுத்தி வருகிறார்கள் என்பது அவரது தகாத பேச்சின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இந்திய உள்துறை அமைச்சர்களாக வல்லபாய் பட்டேல், இராஜாஜி, ஜி.பி. பந்த், லால்பகதூர், சவான், நந்தா மற்றும் சனதா கட்சியின் ஆட்சியில் சரண்சிங், இந்திரசித் குப்தா, பா.ச.க. ஆட்சியில் அத்வானி போன்ற பெருந்தலைவர்கள் அந்தப் பொறுப்பிற்கு ஏற்ற கண்ணியத்தையும், மதிப்பினையும் கவனத்தில் கொண்டு தங்கள் பேச்சு, நடத்தை ஆகியவற்றை கவனமாகக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.
தலைமையமைச்சராக சவகர்லால் நேரு இருந்தபோது, மத்திய அமைச்சர்களுக்குச் சமமாக மாநில முதல்வர்களை மதித்தார். மாதந்தோறும் இந்திய அரசின் வெளி விவகாரச் செயல்பாடுகள் குறித்தும், உள்நாட்டுச் செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கமாக கடிதங்கள் அனுப்பினார். முக்கியமான கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு முன் மாநில முதல்வர்கள் கூட்டத்தினைக் கூட்டி அவர்களுடன் கலந்தாலோசித்தார். ஆனால், இந்த உன்னதமான மரபுகள் யாவும் தற்போதைய ஆட்சியில் பின்பற்றப்படவில்லை.
அந்தந்த மாநிலங்களின் மக்களின் பேராதரவைப் பெற்றே முதல்வர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார்கள். அவர்களை இழித்தும், பழித்தும் எச்சரிக்கை விடுவது அந்தந்த மாநில மக்களின் சனநாயக உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காமல் துச்சமாக நடத்துவதற்கு ஒப்பாகும். இதை நான் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் சந்துமுனை சிந்துபாடியாக இருப்பது ஒட்டுமொத்த நாட்டிற்கே அவமானமாகும். அமித்ஷா போன்றவர்களை தனது கட்டுக்குள் வைப்பதற்கு தலைமையமைச்சர் மோடி முன்வரவேண்டும். இல்லையேல் அவரும் இந்த பழிக்கு ஆளாவார் என எச்சரிக்கிறேன்.





