‘செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்’ என்ற தலைப்பிலான இந்த உலகத் தமிழ் ஆய்வு மாநாடு, நடப்பு ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை கனடாவின் ரொரன்டோவில் நடைபெறவுள்ளது.
உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்களை ஒன்றிணைக்கவுள்ள இம்மாநாட்டில் ஐந்து பிரதான தலைப்புக்களில் ஆய்வுகள் கோரப்பட்டுள்ளன.
தமிழும் செய்யறிவும்: செய்யறிவு உலகில் தமிழ், மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியங்கள் மற்றும் கலைச் சொல்லாக்கம் மெய்ப்பொருளியலும் பண்பாடும்: மெய்ப்பொருளியலும் தமிழர் எண்ணப்பாடுகளும், தமிழ்க்கலை மற்றும் அழகியல், தமிழ்க் குமுக விழுமியங்களும் பெண்ணியமும், புலம்பெயர் தமிழரது பண்பாட்டு மாற்றங்களும் அடையாளம் பேணலும்.
பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும்: தமிழர் பொருளியல் சிந்தனையும் தொழில்முனைவுத் திறனும், அயலகத் தமிழரது பொருண்மியப் பங்களிப்பும் உலகமயமாதலும், விளிம்புநிலை மக்களது வாழ்வியலும் இயற்கைசார் பொருண்மியமும், ஈழத் தமிழரது வாழ்வியலும் மறுவாழ்வும்.
தமிழர் வரலாறும் வாழ்வியலும்: தமிழர் வரலாற்றுத் தொன்மையும் நாகரிக வளர்ச்சியும், தமிழர் கல்வி மற்றும் மருத்துவ அறிவியல் மரபுகள், மொழி வழி அரசியலும் தமிழர் அடையாளம் பேணலும், தமிழர் புலப்பெயர்வும் உலகத் தமிழர் வாழ்வியலும்.
வட-கிழக்குப் பொருண்மிய மேம்பாடு: இலங்கையின் வட-கிழக்கில் சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு; வேளாண்மை, மீன்பிடி, நீர் வளம் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு; மனித வள மேம்பாட்டில் இன்றைய சிக்கல்கள் மற்றும் வட-கிழக்கு மேம்பாட்டில் உலகத் தமிழரது பங்களிப்பு.
இம்மாநாட்டில் தங்களது ஆய்வுகளைச் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வாளர்கள், 250-300 சொற்களுக்குள் அமைந்த தங்களின் ஆய்வுச் சுருக்கத்தை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் தயாரித்து எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதிக்கு முன்னதாக www.GlobalTamilConference.org எனும் இணைதளத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தெரிவுசெய்யப்பட்ட ஆய்வுகள் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படவுள்ளதோடு முழுமையான ஆய்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் சமர்பிக்க வேண்டும்.
மாநாட்டுக் குழுவினரால் விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்படும் இலங்கை மற்றும் இந்திய ஆய்வாளர்களுக்கு கனடா சென்று வருவதற்கான வான்வழிச் செலவுச் சீட்டும், கனடாவில் தங்குமிட வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அறவித்துள்ளனர்





