உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடயம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கேள்வி – தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்துக்கு ஏற்ப நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் எனக்கூறப்பட்டதல்லவா?
பதில்- ஆம். தற்போது நாம் உள்ளூராட்சி மன்றத்தேர்தலை நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். இந்தத்தேர்தலைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான தீர்மானத்தின் போது கொள்கை ரீதியான பிரச்சினைகள் ஏற்படாது என நாம் நம்புகிறோம்.
எனவே நிறைவேற்று அதிகார முறைமை நிறைவுக்கொண்டு வருவதாக இருந்தால் கட்டாயமாக தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும்.
தேர்தல் முறைமை மாற்றத்துக்கு அமையவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முடிவு கொண்டு வர முடியும்.இங்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் போது பிரச்சினைகள் ஏற்படாது.தேர்தல் முறைமையிலேயே சிக்கல் உள்ளது.
கேள்வி – பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் பிரச்சினைக்கு நீண்டகாலமாக தீர்வுக்காணப்படாமல் உள்ளது. அவர்களுக்கு இந்த விடயத்தில் நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் அல்லவா?
பதில் – இந்த்துறையில் வீழ்ச்சியடைந்துள்ள நிறுவனங்கள் உள்ளன.இலாபம் ஈட்டும் நிறுவனங்களும் உள்ளன.இதுவே இன்றைய நிலைமை.எனவே நாம் ஒவ்வொரு நிறுவனங்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு நாம் பணிப்புரை விடுத்துள்ளோம்.
அவர்களுடன் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அதன்பின்னர் பொதுவான கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்போம்.அமைச்சர் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.