சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பது குறித்து சிறிலங்கா ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமானச் சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்படுத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமானச் சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார்.

அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களைத் தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுங்கம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காகக் கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) பீ.எம்.டி. நிலுஷா பாலசூரிய, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தேசிய வரவு செலவு) ஜூட் நிலுக் ஷான், விமான நிலையம் மற்றும் விமானச் சேவை நிறுவனத்தின் தலைவர் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.