சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சி.ஐ.டி.யில் முறைபாடு

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான மற்றும் எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரச மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் சி.ஐ.டி. முறைபாடளித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைத்து ஊடகங்களில் பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக சுமத்தப்பட்டுவருவதாக, அரச மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வைத்தியர்  மனுஜ் சி. வீரசிங்க கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (15) முறைப்பாடளித்துள்ளார்.

அன்மைகாலமாக சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் அரச மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் மருத்துவ விநியோக பிரிவு மற்றும் சுகாதார சேவையில் கடமையாற்றி வரும் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஊடகங்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். ஊடகங்கள் வாயிலாக ஒரு சில தரப்பினர் ஆதாரமற்ற மற்றும் பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன என குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் கலாநிதி மனுஜ் சி.வீரசிங்க தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.  ஆகையால் நியாயமான தீர்மானங்களை எடுப்பதற்கும், அவற்றை செயல்படுவதற்கும் இது பெரும் இடையூறாக உள்ளது. இலவச சுகாதார சேவையை வீழ்த்தவோ, சீர்குலைக்கவோ வேண்டும் என்ற உள்நோக்குடன் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்விடயம் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.