நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் வகிபாகத்தை நிறைவேற்றும் வகையில், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய முறைமையை நடைமுறைப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்காக எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்துடன் இணைக்கப்பட்ட ஊடக மற்றும் ஆய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான செயலூக்கப் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடலும் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
2025 வரவு செலவுத் திட்ட ஆவணத்தை சமர்ப்பிக்கும் போது இடம்பெறவுள்ள விவாதத்தில் மக்களின் கருத்துக்களை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் சரியான தகவல்களின் அடிப்படையில் விவாதங்களுக்கு பங்களிப்பதன் முக்கியத்துவத்தையும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் பங்கேற்பு செயல்முறையின் முக்கியத்துவத்தையும் இந்த செயற்பாடு வலியுறுத்தும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்துக்கு மட்டுப்படுத்தாமல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு தொழிற்சங்கங்களின் கருத்துக்களை வழங்குவதன் மூலம் மக்களுக்கான எதிர்க்கட்சியின் பாத்திரத்தை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய மக்கள் தமது கருத்துக்களை 1094 75 957 0570 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கும் அல்லது connect@oloparliament.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.