கலாச்சார அமைச்சு மற்றும் மத்திய கலாச்சார நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து, யுனெஸ்கோ உலக மரபுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பொலன்னறுவை பண்டைய நகரத்திற்குள் அமைந்துள்ள ஒரு முக்கிய தளமான, பண்டைய தூபாராம பிரதிமை மண்டபத்தைப் பாதுகாப்பதற்காக, ஒரு புதிய பாதுகாப்பு செயற்திட்டத்தினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை (17) ஆரம்பித்து வைத்தது.
கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியத்திலிருந்து (AFCP) வழங்கப்படும் 109,000 அமெரிக்க டொலர்கள் (32 மில்லியன் ரூபாவிற்கும் அதிக) பெறுமதியான மானியத்தின் மூலம் நிதியளிக்கப்படும் இம்முன்முயற்சியானது, எதிர்கால சந்ததிகளுக்காக இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டினைப் பிரதிபலிக்கிறது.
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
“அமெரிக்காவும் இலங்கையும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பங்காண்மையின் ஒரு நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் தூபாராம பிரதிமை மண்டபம் போன்ற கலாச்சார மரபுரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளோம். கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியம் போன்ற முன்முயற்சிகள் ஊடாக, அமெரிக்க மக்கள் சார்பாக, தனது மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நிலைபேறான சுற்றுலாத்துறையினை ஊக்குவிப்பதற்கும், மற்றும் தனது வரலாற்று மற்றும் கலாச்சார செழுமையினை பார்வையிடுவதற்காக உலகளாவிய பார்வையாளர்களை ஈர்ப்பதற்கும் இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து உதவி செய்கிறோம்.” என வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் தூதுவர் சங் வலியுறுத்தினார்.
“கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியத்தினூடாக, அமெரிக்காவானது, இலங்கையின் கலாச்சாரப் பொக்கிஷங்களைப் பாதுகாப்பதில் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டுமொருமுறை வெளிப்படுத்துகிறது. எமக்கிடையிலான பிணைப்பை பலப்படுத்துவதுடன், இலங்கையின் மரபுரிமைகளை மட்டுமன்றி, எமது நாடுகளுக்கிடையிலான தொடர்பினையும் பாதுகாப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள ஆழமான ஈடுபாட்டினை இவ்வொத்துழைப்பு பிரதிபலிக்கிறது.” என இவ்வைபவத்தில் கலந்துகொண்ட புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.
பொலன்னறுவை இராச்சியத்தின் ஒரு பகுதியாக 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தூபாராம பிரதிமை மண்டபமானது, தனித்துவமான வளைந்த செங்கற்கூரை மற்றும் பிரமிப்பூட்டும் சுவர்ப்பூச்சு அலங்காரங்களைக் கொண்ட ஒரு நினைவுச்சின்னமாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொக்கிஷமானது காலப்போக்கில் சுற்றுச்சூழல் காரணிகளால் சேதமடைந்துள்ளது.
அதன் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேளை, அது மேலும் சேதமடைவதைத் தடுப்பதே இந்தப் பாதுகாப்புச் செயற்திட்டத்தின் நோக்கமாகும்.
கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியம் (AFCP) பற்றி:
கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியமானது (AFCP) கடந்த 23 வருடங்களாக உலகளாவிய ரீதியில் 140இற்கும் மேற்பட்ட நாடுகளில் கலாச்சாரப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவி செய்துள்ளது.
2001ஆம் ஆண்டு முதல் இலங்கையில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாப்பதற்கான 17 செயற்திட்டங்களில் இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் சமயம்சார்ந்த சமூகங்களுடன் அமெரிக்கா ஒத்துழைப்புடன் பணியாற்றியுள்ளது.
ரஜகல பௌத்த வன மடாலயத்தினை பாதுகாத்தல், அனுராதபுரம் தொல்பொருள் நூதனசாலையிலுள்ள சேகரிப்புகளைப் பாதுகாத்தல், மட்டக்களப்பு டச்சுக் கோட்டையினை மறுசீரமைத்தல் என்பனவும் இச்செற்திட்டங்களில் உள்ளடங்குகின்றன.
மிக சமீபத்தில், கண்டி புனித தந்த தாது ஆலய வளாகத்தினுள் அமைந்துள்ள கண்டி அரசர்களின் அரண்மனை மற்றும் தொல்பொருள் நூதனசாலை ஆகியவற்றினை பாதுகாப்பதற்கு அமெரிக்கா உதவி செய்தது. இப்பாதுகாப்பு முயற்சிகள் தரையினையும் தாண்டி விரிவடைகின்றன.
ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் காணப்படும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் மிகவும் பழமை வாய்ந்த கப்பல் சிதைவான கொடவாய கப்பல் சிதைவினை பாதுகாப்பதற்கும் AFCP ஊடாக அமெரிக்கா உதவி செய்கிறது.
மனிதகுலத்தின் பகிரப்பட்ட வரலாறு மற்றும் பங்களிப்புகளின் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக கலாச்சார பாரம்பரியம் விளங்குகிறது. அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதனூடாக, உலகெங்கிலும் காணப்படும் பல்வேறு கலாச்சாரங்கள் மீது தான் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையினை அமெரிக்கா வெளிப்படுத்துகிறது.
பண்டைய கட்டமைப்புகளை புனரமைப்பது முதல், அரிய கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாப்பது, முக்கிய தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பது மற்றும் மறைந்து வரும் பாரம்பரியங்களை ஆவணப்படுத்துவது வரை, AFCP திட்டங்கள் விலைமதிப்பற்ற மரபுரிமைகளைப் பாதுகாக்கின்றன.
AFCP முன்முயற்சிகள் வரலாற்றைப் பாதுகாக்கின்றன, ஒற்றுமை மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் சிவில் சமூகத்தை பலப்படுத்துகின்றன, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றினூடாக நல்லாட்சிக்கு உதவி செய்கின்றன, மற்றும் வேலை வாய்ப்புகள், வருமானம் மற்றும் நிலைபேறான வளர்ச்சி போன்றவற்றை உருவாக்குவதன் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகின்றன.