மன்னாரில் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது – 19,723 குடும்பங்களைச் சேர்ந்த 67,928 பேர் பாதிப்பு

என்றும் இல்லாதவாறு இம்முறை மன்னார் மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பங்கு பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மன்னார் மாவட்டத்தில் 19,723 குடும்பங்களைச் சேர்ந்த 67,928 பேர் பாதிப்படைந்துள்ளனர் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வியாழக்கிழமை (28) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த 23ஆம் திகதியிலிருந்து பெய்துவரும் மழை வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தைத் தொடர்ந்து பெரும் மழைவீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னாரில் என்றும் இல்லாதவாறு இம்முறை மூன்றில் இரண்டு பங்கு பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மன்னார் மாவட்டத்தில் 19,723 குடும்பங்களைச் சேர்ந்த 67,928 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதனை விட 3210 குடும்பங்களைச் சேர்ந்த 10,263 பேர் 69 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குதல், வெள்ள நீரை வெளியேற்றுதல் போன்ற பணிகளுக்கான செலவுக்காக எமக்கு 7 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைவாக நாங்கள் சமைத்த உணவுக்கான குறித்த தொகையை வழங்கி வரும் அதேவேளை மேலதிகமான நிதியையும் நாங்கள் கோரியிருக்கிறோம்.

23ஆம் திகதி தொடக்கம் மழை காரணமாக இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு ஒரு வாரத்துக்கான உலர் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்படி நாங்கள் அரசை கேட்டுள்ளோம்.

இதைத் தொடர்ந்து 38 மில்லியன் ரூபா அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பயிர்ச் செய்கையும் பெருமளவு பாதிப்படைந்துள்ளது. இம்முறை மேற்கொள்ளப்பட்ட காலபோக விவசாயத்தில் 7,988 ஹெக்டேயர் நெற்செய்கை நீரினால் மூழ்கடிக்கப்பட்டு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

இதனை மதிப்பீடு செய்யும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான காப்புறுதியை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்பொழுது நடந்து முடிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், அழிவுகளை எதிர்கொண்ட விவசாய ஹெக்டேயர்களுக்கு உரிய விதை நெல்லை இலவசமாக பெற்றுக்கொடுப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையையும் நாம் முன்னெடுக்க இருக்கிறோம்.

இத்துடன் மன்னார் மாவட்டத்திலுள்ள கால்நடைகளை பயிர் செய்யும் காலத்தில் பாலியாற்றுக்கு அருகாமையிலுள்ள தேத்தாவாடியில் விடுவது வழக்கம். அந்த வகையில் அங்கு விடப்பட்ட 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள் பலத்த மழை காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த கால்நடை தொடர்பான விபரங்களையும் மதிப்பீடு செய்வதில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு இலட்சத்து 20 ஆயிரம் கால்நடைகளுக்கு பொருத்தமான மேய்ச்சல் நிலம் இல்லாமை என்பது இங்குள்ள கால்நடை வளர்ப்போருக்கு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கும் நாம் ஒரு தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ஆகவேதான் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளோம்.

இந்த சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்ட பின்பு இதன் அறிக்கைகளை அனர்த்த முகாமைத்துவத்துக்கு அனுப்பி நஷ்டம் அடைந்தவர்களுக்கு நஷ்டஈட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் வெள்ளநிலை சீரடைந்து வருகின்றது.

27ஆம் திகதி பிற்பகலில் இருந்து பெரும் மழை நிகழவில்லை. இருந்தும் மன்னார் மாவட்டத்தை யாழ். மாவட்டத்துடன் இணைக்கின்ற ஏ32 வீதி முல்லைத்தீவு, வவுனியா குளங்களில் பெருக்கெடுத்து வரும் நீரினால் இந்த வீதியை குறுக்கெடுத்து பாய்வதனால் 28ஆம் திகதி காலையிலிருந்து போக்குவரத்தும் தடைப்பட்டு வருகிறது.

ஆகவே இந்த பாதையால் பிரயாணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு நாங்கள் மக்களை கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளையும் மன்னார் மாவட்ட அரச திணைக்கள ஒத்துழைப்புடன் பிரதேச செயலாளர்கள் அனர்த்த செயற்பாடுகளை மிக திறமையான முறையில் செயற்பட்டு வருவதையும் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்றி தெரிவிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது என்றார்.

சமீபத்திய செய்திகள்